சனாதனத்துக்கு எதிராக அமைச்சர்கள் பேசியதாக வழக்கு; ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சனாதன தர்மத்துக்கு எதிராக தமிழக அமைச்சர்கள், திமுக எம்.பி. ஆகியோர் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த செப்.2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோர் சனாதன தர்மத்துக்கு எதிராக பேசியது சர்ச்சையானது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.பி.யை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணியை சேர்ந்த டி.மனோகர், கிஷோர்குமார், வி.பி.ஜெயக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக கோ-வாரண்டோ வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

‘சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். திமுக எம்.பி.யான ஆ.ராசா, சனாதன தர்மத்தை தொழுநோய், எச்ஐவியுடன்தான் ஒப்பிட வேண்டும் என இழிவாக பேசியுள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சனாதன தர்மமும், இந்து தர்மமும் ஒன்று என பேசியுள்ளார். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் சேகர்பாபு சக அமைச்சராக பங்கேற்றது துரதிருஷ்டவசமானது.

இதன்மூலம் தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்பி ஆகியோர் தாங்கள் ஏற்றுக்கொண்ட பதவிப்பிரமாண உறுதிமொழிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதிகளான இவர்கள் மக்களின் மத நம்பிக்கைக்கு எதிராக செயல்பட முடியாது. எனவே, இவர்கள் மூவரும் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றனர் என விளக்கம் கேட்டு அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக நடந்தது. அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான பி.வில்சன், “இந்த வழக்கு தவறாக தொடரப்பட்டுள்ளது. அமைச்சராக, எம்.பி.யாக பதவியில் இருப்பவர்கள், பதவி வகிப்பதில் விதிமீறல்களில் ஈடுபட்டால் மட்டுமே கோ-வாரண்டோ வழக்கு தொடர முடியும். அப்படி எந்தவொரு காரணத்தையும் மனுதாரர்கள் தங்களின் மனுவில் தெரிவிக்கவில்லை. இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்புகளை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்” என வாதிட்டார்.

அமைச்சர் சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, “இந்த கூட்டம் எங்கே நடந்தது. அதில் பங்கேற்றவர்கள் என்ன பேசினார்கள். அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்பது தொடர்பாக எந்தவொரு விவரங்களும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை. குறிப்பாக அந்த கூட்டத்தை நடத்தியவர்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து ஆராய வேண்டும்” என்றார்.

அதையடுத்து நீதிபதி, அமைச்சர்கள் உதயநிதி, பி.கே.சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசா ஆகியோரது பேச்சு மற்றும் கூட்டத்தில் பங்கேற்றதற்கான ஆதாரங்களை மனுதாரர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அக்.11-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்