டாஸ்மாக் கடையை திறக்க வலியுறுத்தி கொத்தமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வணிகர்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கடைவீதியில் செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் கடைகள் பொதுமக்களின் எதிர்ப்பால் 2017-ல் மூடப்பட்டன. அதன்பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அன்றைய தினமே கடை மூடப்பட்டது.

பின்னர், அதே கடை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இக்கடையை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் தற்காலிகமாக கடை மூடப்பட்டது. தொடர்ந்து, காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வணிகர்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தால், மருந்து, பால் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட ஒரு சில கடைகளைத் தவிர ஏனைய கடைகள் மூடப்பட்டன. கடைகள் மூடப்பட்டதால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து வணிகர்கள் கூறியபோது,“இக்கிராமத்தில் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தாலும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கூடுதல் விலை கொடுத்து வாங்கி, போலியான மதுபானங்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். இதைத் தடுப்பதற்காகவே டாஸ்மாக் கடையை திறக்க வலியுறுத்துகிறோம்” என்றனர்.

இதைத்தொடர்ந்து, ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஸ்வநாதன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கொத்தமங்கலத்தைச் சேர்ந்த இரு தரப்பினரும் கலந்துகொண்டு, கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, “15 நாட்கள் டாஸ்மாக் கடை தொடர்ந்து மூடியே இருக்கும்.

அதற்குள் டாஸ்மாக் கடை தேவையில்லை என்போர் நீதிமன்றத்தை நாட வேண்டும். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என வட்டாட்சியர் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE