“சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கட்சி அதிமுக” - எடப்பாடி பழனிசாமி கருத்து

By க.சக்திவேல்

கோவை: “தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே அதிமுக தனித்து போட்டியிறது” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவது இந்த அரசின் வாடிக்கையாக உள்ளது. இதற்கெல்லாம் ஒருநாள் பதில் சொல்லியாக வேண்டும். நிர்வாக திறமையற்ற அரசாக இந்த அரசு உள்ளது. பொம்மை முதல்வர் மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறார். மக்களுக்கு பாதுகாப்பில்லை.

யார், யாருக்கு எதிரி, என மக்கள் தெளிவாக சொல்வார்கள். அதிமுகதான் பிரதான எதிர்கட்சி. உதயநிதி ஸ்டாலின் மாய உலகத்தில் மிதந்து வருகிறார். பாஜவுடனான கூட்டணி குறித்து எங்களுடைய நிலைப்பாட்டை கடந்த 25-ம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி தெளிவுபடுத்திவிட்டோம்.

தமிழ்நாட்டின், தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சி பெற புதிய திட்டங்கள் வழங்க வேண்டும். அதற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு முழுமையாக பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பவைதான் எங்களின் பிரதான கோரிக்கை. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெறும்போது இதை முன்னிறுத்துவோம்.

பல்வேறு மாநிலங்களில் உள்ள தேசிய கட்சிகள் எல்லாமே, அந்ததெந்த மாநில பிரச்சினைகளைதான் அவை முன்வைக்கின்றன. தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கட்சி அதிமுக. அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி வலிமையான கூட்டணியாக இருக்கும். இந்த நாடாளுமன்ற தேர்தலோடு டிடிவி தினகரன் கட்சி விலாசம் இல்லாமல் போய்விடும்” இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE