“வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடா?” - அன்புமணி

By செய்திப்பிரிவு

சென்னை: “தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் அரசின் நிலைப்பாடா?” என்று காஞ்சிபுரம் சம்பவத்தை மேற்கோள்காட்டி பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வட இந்தியத் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் அதிக வேலை செய்வதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், உள்ளூர் மக்கள் அதிக ஊதியமும், அதிக விடுமுறையும் கேட்பதுடன் குறைந்த அளவில் மட்டுமே வேலை செய்வதால் அவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கூறியிருக்கிறார். ஒரு மாவட்ட ஆட்சியராக மாவட்ட மக்களின் நலனுக்கும், வாழ்வாதாரத்திற்கும் வகை செய்ய வேண்டிய அவர், தனியார் மனிதவள மேலாண்மை நிறுவனத்தின் அதிகாரியைப் போன்று பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகளைக் கொண்ட மாவட்டங்களில் காஞ்சிபுரமும் ஒன்றாகும். சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. அந்தத் தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு தான் வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கூட தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80% வரை உள்ளூர் மக்களுக்குத் தான் வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளன. தமிழகத்தில் அத்தகைய சட்டம் இயற்றப்படவில்லை என்றாலும் கூட, குறைந்தபட்சம் முன்னுரிமையாவது அளிக்கப்பட வேண்டும்.

அதை விடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் மக்களை புறக்கணித்து விட்டு, வட இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிப்பதும், அதை மாவட்ட ஆட்சியரே நியாயப்படுத்துவதும் எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. மக்களின் காவலராக திகழவேண்டிய மாவட்ட ஆட்சியர், தனியார் நிறுவனங்களின் முகவரைப் போல செயல்படக் கூடாது. ஆந்திராவில் பிற மாநிலத்தவருக்கு வேலை மறுக்கப்படுவதால் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஸ்ரீசிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் கூட தமிழர்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை. உள்ளூர் தொழிற்சாலைகள் தான் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வாய்ப்பு எனும் போது அதிலும் துரோகம் செய்வதை அனுமதிக்க முடியாது.

2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தால் இந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை. அரசின் செயல்பாடின்மையும், அமைதியும் தான் மாவட்ட ஆட்சியர்களையும், தனியார் தொழிற்சாலைகளையும் உள்ளூர் மக்களுக்கு எதிராக செயல்படத் தூண்டுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை வழங்குவதில் தமிழ்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமா? அல்லது வட இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு என்றால், அதற்கு எதிராக பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 80% வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்குவதற்கான சட்டத்தை வரும் 9-ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்