திருச்சி: திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை பணியில் நீண்ட இழுபறிக்குப் பின் மாத்தூர்- பஞ்சப்பூர் இடையேயான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், திருச்சி-தஞ்சாவூர், திருச்சி- புதுக்கோட்டை, திருச்சி-மதுரை, திருச்சி- திண்டுக்கல், திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் துவாக்குடியிலிருந்து மாத்தூர், பஞ்சப்பூர், சோழன் நகர் வழியாக ஜீயபுரம் வரை 44 கி.மீ தொலைவுக்கு அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, துவாக்குடி- பஞ்சப்பூர், பஞ்சப்பூர்- ஜீயபுரம் என இரு கட்டங்களாக இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், துவாக்குடி- பஞ்சப்பூர் இடையிலான 25.91 கி.மீ சாலைப் பணியில், துவாக்குடி- மாத்தூர் இடையிலான 12.70 கி.மீ தொலைவுக்கான பணிகள் முடிவுற்று கடந்தாண்டு முதல் போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.
மீதமுள்ள மாத்தூர்- பஞ்சப்பூர் இடையிலான 13.21 கி.மீ தொலைவுக்கான பணிகளில் 95 சதவீதம் கடந்தாண்டே முடிவடைந்தன. ஆனால், இந்த வழித்தடத்தில் குறுக்கிடும், காரைக்குடி- திருச்சி ரயில்வே வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்க தெற்கு ரயில்வே அனுமதி தர மறுத்ததால், இந்தச் சாலைப் பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒப்பந்த நிறுவனம் மேம்பாலம் அமைக்க அனுமதி கேட்டு ரயில்வே நிர்வாகத்துக்கு 3 முறை கடிதம் அனுப்பியது. அதன் பின்னர் ரயில்வே வாரியத்தின் ஆலோசனையின் பேரில், கட்டப்பட்ட தூண்களுக்கு பதிலாக புதிய தூண்கள் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தற்போது மேம்பாலம் அமைக்கும் பணி கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது.
» ராகு கேது பெயர்ச்சி பொதுப்பலன் - அக்.8, 2023 முதல் ஏப்.26, 2025 வரை | ஒரு பார்வை
» ‘லியோ’ ட்ரெய்லர் காட்சியில் திரையரங்கை சேதப்படுத்திய ரசிகர்கள்: போலீஸ் மீது ஐகோர்ட் அதிருப்தி
இதையடுத்து சாலையின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஓரிரு நாட்களில் ஆய்வு நடத்தப்பட்டு, அதற்கான அறிக்கை அடுத்த வாரத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன்பின், சாலை பாதுகாப்பு கமிட்டியின் ஆலோசனைக்கு பிறகு அடுத்த ஒரு வாரத்தில் பஞ்சப்பூர்- மாத்தூர் இடையிலான சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை சந்திப்புகள் விபத்து: இதே வேளையில், இந்த சாலையுடன் இணைக்க கூடிய மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விபத்துகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஓலையூர்- இச்சிகாமலைப்பட்டி குடியிருப்போர் நலச் சங்கங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.என்.ராஜா கூறியது: துவாக்குடி- பஞ்சப்பூர்- துவாக்குடி இடையிலான சுற்றுச்சாலையில், ஓஎப்டி-பழங்கனாங்குடி, திருவெறும்பூர்- பெரிய சூரியூர், திருச்சி- புதுக்கோட்டை, மாத்தூர்-ஆவூர், ஓலையூர்-கே.கே.நகர் ஆகிய இணைப்பு சாலைகளில் விபத்துகள் நேரிடாத நாளே இல்லை. எனவே வாகன ஓட்டிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்த பிறகே சுற்றுச்சாலையில் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இந்த சாலையில் 7 இடங்கள் அடிக்கடி விபத்து நேரிடுடம் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து விபத்துகளை தடுக்கும் வகையில், சாலை பாதுகாப்பு கமிட்டியின் ஆலோ சனை பெற கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்ட பிறகு அடுத்தகட்டமாக சாலை பாதுகாப்பு கமிட்டியின் ஆய்வு நடத்தப்படும். அந்த குழு கூறும் ஆலோசனைகளுக்கு பிறகு, சந்திப்பு பகுதிகளில் சாலை வடிவமைப்பு மாற்றியமைக்கப்படும்.
குறிப்பாக திருச்சி- புதுக்கோட்டை தேசியநெடுஞ்சாலையில், மேம்பாலம் அமைப்பதற்கான சர்வே பணி நடைபெற்று முடிந்துள்ளது. மாத்தூர்- காரைக்குடி இடையே நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றார்.
பஞ்சப்பூர்- ஜீயபுரம் பணிகள்: அடுத்த கட்டமாக பஞ்சப்பூரிலிருந்து சோழன்நகர் வழியாக ஜீயபுரம் வரையிலான
18.43 கி.மீ தொலைவுள்ள சுற்றுச்சாலை பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணி திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிக்கை வந்த பிறகு அடுத்தாண்டு தொடக்கத்தில் அடுத்த கட்டப்பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பை மீறி சுங்கச்சாவடி: துவாக்குடி- மாத்தூர் இடையே பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. துவாக்குடி- பஞ்சப்பூர் சுற்றுச்சாலை முழு பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அடுத்த ஓரிரு நாட்களில் சுங்கச்சாவடியும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
சுங்கச்சாவடிக்கு தேவையான 90 சதவீத கட்டமைப்புகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளன. இதில், இணையதள வசதி உள்ளிட்ட சேவைகள் மட்டுமே நிலுவையில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago