ஸ்ரீபெரும்புதூரில் போதிய இட வசதி இல்லாமல் இயங்கிவரும், 52 ஆண்டுகள் பழமையான நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வாசகர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலையில் உள்ள நூலகம் கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1993-ல் இந்த நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதில் 4,300 வாசகர்கள் பதிவு செய்துள்ளனர். 45 புரவலர்கள் உள்ளனர். தினமும் 200-க்கும் மேற்பட்ட வாசகர்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகம் படிக்க வருகின்றனர். இல்லத்தரசிகளும் இந்த நூலகத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். பொது அறிவு புத்தகம், இலக்கியம், நாவல், வரலாறு, அறிவியல், விஞ்ஞானம், கவிதை, போட்டித் தேர்வு, சுற்றுலா, ஆன்மிகம், சாதனையாளர்கள் வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
நீர் கசிவால் பாதிப்பு
கிளை நூலகமாக இருந்தாலும் வாசகர்களின் வருகை அதிகம் என்பதால் முழுநேரமாகவே இயங்குகிறது. இந்த நூலகக் கட்டிடத்தில் மழைக் காலங்களில் நீர் கசிந்து நூலகத்தின் உள்ளே இருக்கும் அரிய வகை புத்தகங்கள் பாழாகின்றன. கரையான்களால் பல புத்தகங்கள் அழிந்துள்ளன. நூலகத்தின் மேல் தளம் தரமற்றதாக இருப்பதால் லேசாக மழை பெய்தாலும்கூட நீர் கசிந்து ஒழுகுகிறது.
மேலும், இங்கு புத்தகங்களை அடுக்கி வைக்க போதிய அளவு அலமாரிகள் இல்லை. எனவே, புத்தகங்கள் மூட்டைகளாக கட்டப்பட்டு, நூலகத்தின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், கல்லூரி சம்பந்தமான புத்தகங்களை மாணவர்கள் படிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் நூலகத்தில் அமர்ந்து படிக்கக் கூடிய இருக்கைகள் பழுதடைந்தும், உடைந்தும் காணப்படுகின்றன.
இதனால் வாசகர்கள் அமர்ந்து கூட படிக்க வழியில்லாமல் நூலகத்தின் வெளியேயும், படிக்கட்டில் அமர்ந்தும் படிக்கின்றனர். நூலகத்துக்குரிய அம்சங்கள் எதுவுமே இல்லாமல் பெயரளவுக்கு செயல்பட்டு வரும் இந்த நூலகத்தை சீர்படுத்தி, உரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என வாசகர்கள், குறிப்பாக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடப்பற்றாக்குறை
இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் மாவட்ட தலைவர் கே.முகம்மது கனி கூறும்போது, “நூலகம் சேதமடைந்துள்ளதால் வாசகர்களின் வருகை குறைந்துவிட்டது. தற்போது நடத்தப்பட்டு வரும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், தற்போது நூலகத்தில் போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. இடப்பற்றாக்குறை உள்ளதால் தேவையான புத்தகங்களை தேடி எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் புத்தகங்கள் மழை நீரில் நனைகின்றன.
மேலும் இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடம் உள்ளது. நூலகத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கழிப்பிட வசதியையும் ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago