காவிரி பிரச்சினையில் முதல்வரிடம் எதிர்பார்ப்பது என்ன? - தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் பட்டியல்

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: “நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசுக்கு தமிழகத்தின் நெய்வேலியில் இருந்து மின்சாரம் வழங்க மாட்டோம் என்கிற அறிவிப்பை, தஞ்சாவூருக்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தவறாமல், தயங்காமல் வெளியிட வேண்டும்” என்று தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில், "நிகழாண்டு கர்நாடகா அரசால், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பொய்த்துப் போய்விட்டதால் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தமைக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அதே வேளையில் காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காமல் கர்நாடக அரசு அங்குள்ள விவசாயிகளை தூண்டிவிட்டு அந்த மாநிலம் முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள், வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு நாடகம் நடத்தியுள்ளது.

சுந்தர.விமலநாதன்

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், தொழிலாளிகளின் ஆதரவுடன் தமிழக அரசின் ஒத்துழைப்போடு, தமிழகம் தழுவிய கடையடைப்பு மற்றும் முழு பொது வேலை நிறுத்த்துடன் கூடிய முழு பந்துக்கான அறிவிப்பினை நாளை (அக்.6) தஞ்சாவூருக்கு வரும் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். குறுவை, சம்பா, தாளடி சாகுபடியில் எதிர்கொள்ள இருக்கும் வாழ்வாதாரம், பொருளாதார இழப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசின் மீது மற்றொரு சிறப்பு வழக்கு தொடர்வதற்கான அறிவிப்பினையும் வெளியிட வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசும், மத்திய அரசும் அறிவித்து, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து நிதியைப் பெற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக, மத்திய அரசு அறிவிக்க தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை முழுமையாக விலக்கிக் கொண்டு புதிதாக முதல்வரின் பயிர் காப்பீடு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்திட வேண்டும். நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசுக்கு தமிழகத்தின் நெய்வேலியில் இருந்து மின்சாரம் வழங்க மாட்டோம் என்கிற அறிவிப்பையும் தவறாமல், தயங்காமல் வெளியிட வேண்டும்.

மேலும் நிகழாண்டு காவிரி ஆற்று நீரை முழுமையாக நம்பி சம்பா, தாளடி சாகுபடி செய்யலாமா? வேண்டாமா என்பதையும் அதற்கு மாற்று என்ன என்பதையும் தங்களுடைய தஞ்சாவூர் வருகையின் போது அறிவித்திட வேண்டும்" என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE