சென்னையில் கைதான ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட மறுப்பு - ‘சமுதாயக் கூடங்களில் அடிப்படை வசதியின்றி அவதி’

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ள சமுதாய கூடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லை எனவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தை 8-வது நாளாக தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் பல்வேறு சமுதாய கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூர், புதுப்பேட்டை என சென்னையின் பல இடங்களில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைவைக்கப்பட்டிருந்தாலும் தங்களது போராட்டத்தை கைவிட மறுத்துவருகின்றனர்.

அரசு தங்களது கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்த இடைநிலை ஆசிரியர்கள், சாப்பிட மறுத்து போராடிவருகின்றனர். ஆசிரியர்கள் அனைவருக்கும் சமமாக உணவு கிடைக்கவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டுள்ளது என்பதால் சாப்பிட மறுத்து போராடுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், ஆசிரியர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கும் சமுதாய கூடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார்கள் எழுந்துள்ளன. சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர பூங்கா அருகே சமுதாய கூடத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 300 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கழிவறையில் தண்ணீர் வரவில்லை என்றும், குடிநீர் வசதியும் இல்லை எனவும் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இதனிடையே, 3 ஆசிரியர்கள் சமுதாய கூடத்தில் மயக்கமடைய, அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

புதுப்பேட்டையில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கும் இதேநிலைதான். அனைத்து ஆசிரியர்களும் அடிப்படை வசதிகள் கேட்டு அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். கழிவறை வசதி இல்லாததால் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனிடையே, "ஆசிரியர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நியாயமான கோரிக்கையைக்கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

“போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள ஆசிரியர்களை தமிழக அரசு மீண்டும் அழைத்து பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமான சிலவற்றையாவது ஏற்று அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்: இதனிடையே, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களுக்கு முழு நேர ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்றும், டெட் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் போட்டித் தேர்வை ரத்து செய்துவிட்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திவந்தனர். அவர்களது கோரிக்கை குறித்து ஆலோசிக்க 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட அறிவிப்பை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் இன்று அறிவித்தனர்.

பின்னணி: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 8 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனிடையே, நேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 10,359 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது. அவர்களுக்கான ஊதியம் ரூ.2,500 வரை உயர்த்தி வழங்க முடிவாகியுள்ளது. கூடுதலாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.10 லட்சம் வரையான மருத்துவக் காப்பீடு திட்டமும் வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார்.

ஆனால், அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று (அக்.5) அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஏழு நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கு மேலாக அனுமதி வழங்க முடியாது என்று கூறி, காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE