“2024 தேர்தலில் திமுக - பாஜக இடையேதான் போட்டி” - ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அண்ணாமலை உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: "திமுகவா, பாஜகவா என்பதுதான் சவால். திமுக தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. போட்டி எங்கள் இருவருக்கும்தான். 2024 தேர்தலில் அதை பார்த்துவிடலாம்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில், வியாழக்கிழமை தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் மற்றும் மாநில துணைத் தலைவர்களான கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்பட்டதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அதை எதற்கு ஊடகங்களிடம் சொல்ல வேண்டும். தமிழக மக்களிடத்தில் எப்போது சொல்ல வேண்டுமோ, அப்போது சொல்கிறேன். பாஜக கட்சி எப்படி தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தப் பாதையில் செல்ல வேண்டும். 2024 தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் கிடையாது. கட்சியின் தலைவர்களுடன் உள்ளரங்கில் விவாதிக்கப்பட வேண்டிய நிகழ்வு.

பாஜகவைப் பொறுத்தவரை, தேசிய ஜனநாயக கூட்டணி 1998-ல் ஆரம்பிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக என்டிஏ இருக்கிறது. வெவ்வேறு காலக்கட்டத்தில் என்டிஏவின் தன்மை மாறியிருக்கிறது. நிறைய கட்சிகள் வந்துள்ளனர்.நிறைய கட்சிகள் சென்றுள்ளனர். நிறைய கட்சிகள் பரிமாணத்தோடு மீணடும் வந்திருக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி 2024-ல், தமிழகத்தில் பிரதமர் நரேந்திரமோடிக்காக மிகப்பெரிய அளவில் இங்கிருந்து மக்களவை உறுப்பினர்களை அனுப்பிவைக்கும். மற்றபடி இந்தக் கூட்டத்தில் என்ன பேசினோம். தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பது எல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க வேண்டிய விஷயம் இல்லை.

பாஜகவைப் பொறுத்தவரை, என்டிஏவை பிரதானப்படுத்திச் செல்கிறோம். 2024-ல் பாஜக நிச்சயமாக, தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை இங்கு முன்னெடுக்கும். அதற்கான அறிகுறிகள் தேர்தலுக்கு முன்பே தெரியும். 2024-ல் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் வாக்கு சதவீதத்தையும் நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்" என்றார்.

அப்போது, பாஜகவுடன் அதிமுக இல்லை என்று வருத்தப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்தந்த கட்சிகள், அந்தந்த கட்சியின் வளர்ச்சியைத்தான் பார்க்க வேண்டும். பாஜக தன்னுடைய வளர்ச்சியைப் பார்க்கிறது. இதில் வருத்தப்படவோ, சந்தோஷப்படவோ ஒன்றும் இல்லை. நான், ஒருவர் இருக்கிறார் என்பதற்காக சந்தோஷப்பட்டதும் இல்லை, சென்றுவிட்டனர் என்பதற்காக வருத்தப்பட்டதும் இல்லை.

என்னுடைய ஒரே நோக்கம், பாஜக வலிமை அடைய வேண்டும் என்பது மட்டும்தான். அதுவே தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் நோக்கமாக இருக்கிறது. 2024 என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல். அவர் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்கான தேர்தல். தமிழகத்தில் 2024-ல், தமிழகத்தில் 39-க்கு 39 நரேந்திர மோடியின் பக்கம் வரும்" என்றார்.

அதிமுக தலைவர்களை விமர்சிப்பதாக, உங்கள் மீது குற்றம்சாட்டி கூட்டணி உடைக்கப்பட்டுள்ளதே என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "என் மீது இந்த குற்றச்சாட்டு மட்டும் இல்லை. தமிழகத்தில் உள்ள பல கட்சிகள், பல குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். அதற்கெல்லாம் பதிலளிப்பது எல்லாம் சரியாக இருக்காது. என்னுடைய வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் செல்ல வேண்டிய பாதையில் தெளிவாக இருக்கிறேன். எந்தப் பாதையில் பாஜக செல்ல வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறேன்.

எனவே, என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், அவதூறுகள் குறித்து நான் பொருட்படுத்துவது இல்லை. அதற்கெல்லாம் நான் பதிலும் சொல்லவில்லை. எனவே, இந்த கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை" என்றார்.

அதிமுக கூட்டணி முறிவு குறித்து அக்கட்சியினர் கருத்துக் கூறி வரும் நிலையில், பாஜக அமைதி காப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இதில் அமைதி காப்பதற்கு ஒன்றும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை, 2024-ல் எங்கள் கட்சியைச் சார்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல். இது எங்களுடைய கல்யாணம், எங்களுக்கான தேர்தல். அதற்கான வேலைகளை நாங்கள் செய்யப் போகிறோம்" என்றார்.

அப்போது அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தடையாக இருந்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இதற்கு எல்லாம் ஒரே தீர்வு, 2024 தேர்தல் முடிவுகள்தான். அந்த முடிவு தெரியாமல், யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் கூறலாம். உள்ளாட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களில் பாஜக தனியாக சென்றதால்தான், மூன்றாவது பெரிய கட்சியாக உருவாகியது. எனவே, 2024 தேர்தல் முடிவுகள் வரட்டும். இது மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும் என்பதற்கான தேர்தல். எனவே இந்த தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஆதரவாகத்தான் இருக்கும்" என்றார்.

அப்போது அவரிடம் அதிமுகவா, பாஜகவா என்று சவால் விடுக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "திமுகவா, பாஜகவா என்பதுதான் சவால். திமுக தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. போட்டி எங்கள் இருவருக்கும்தான். இதை நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறி வருகிறேன். இன்றைக்கு மட்டும் சொல்லவில்லை. திமுகவா, பாஜகவா என்று சவால். 2024 தேர்தலில் அதை பார்த்துவிடலாம்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்