போராட்டம் தொடரும்: ஆசிரியர்கள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்ட நிலையில், போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

ஊதிய முரண்பாடுகளை சரிசெய்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 7 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். துறை செயலர் காகர்லா உஷா, இயக்குநர் அறிவொளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை ஏற்க முடிவு செய்யப்பட்டது. ‘பகுதிநேர ஆசிரியர்களின் மாத தொகுப்பூதியம் ரூ.2,500 வரை உயர்த்தி வழங்கப்படும். ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு 3 மாதத்தில் அறிக்கை அளிக்கும். ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு உயர்த்தப்படும்’ என்று அமைச்சர் தெரிவித்தார். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனால், இதை ஏற்க மறுத்த இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE