சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 79 விளம்பர பலகைகளை மாநகராட்சி அகற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 79 விளம்பரப் பலகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், சென்னை உயர் நீதிமன்ற ஆணைக்கிணங்க, அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த செப்.21-ம்தேதிமுதல், இன்று வரை சுமார்79 விளம்பரப் பலகைகள் மாநகராட்சியால் அகற்றப்பட்டுள்ளன.

இரவு பகலாக பணி: மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகளும் கண்டறியப்பட்டு, அவை அனைத்தும் கட்டுமானத்துடன் விரைவில் அகற்றப்படும் வகையில், இப்பணியானது இரவுபகலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், கட்டிட உரிமையாளர்கள், தங்களுக்குச் சொந்தமான கட்டிடத்தில் விளம்பரப் பலகைகளை அமைக்க, அவ்விளம்பர நிறுவனங்கள் அவ்விடத்தில் விளம்பரம் செய்ய சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை: அவ்வாறு உரிமம் இல்லாமல் விளம்பரப் பலகை அமைக்கக் கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதிக்கும் பட்சத்தில், மாநகராட்சியால் கட்டிடத்தின் உரிமையாளர் மீதுசட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE