குமரியில் விடிய விடிய கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை; முதியவர் மரணம் - முழு நிலவரம்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாழக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் மரணமடைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவ மழை தவறிய நிலையில், கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக மழை அதிகரித்தது. இதில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து இடை விடாது இடி மின்னலுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதிகபட்சமாக குருந்தன் கோட்டில் 134 மிமீ., மழை பெய்திருந்தது. நாகர்கோவிலில் 97 மிமீ., கொட்டாரத்தில் 82, அடையாமடையில் 75, மயிலாடியில் 74, கோழிப் போர்விளையில் 73, மாம்பழத்துறையாறு இரணியலில் தலா 72, ஆனைக்கிடங்கில் 70, பாலமோரில் 62, முள்ளங்கினாவிளையில் 61, பூதப்பாண்டியில் 60, தக்கலையில் 54,

குழித்துறையில் 45, குளச்சல் மற்றும் சிவலோகத்தில் 38, களியலில் 37, திற்பரப்பு மற்றும் சிற்றாறு ஒன்றில் 35, கன்னிமாரில் 30, பேச்சிப் பாறையில் 29, சுருளகோட்டில் 25 மிமீ மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரி மழை விகிதம் 53 மிமீ., ஆகும். குமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச மழை விகிதம் இதுவாகும்.

மழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை நீர்மட்டம் நேற்று 30 அடியை தாண்டியது. அணைக்கு விநாடிக்கு 2,127 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 331 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் நேற்று 56 அடியாக உயர்ந்தது.

அணைக்கு 1,939 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 13.71 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 396 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 6 மாதங்களுக்கு பின்னர் 5 அடியாக உயர்ந்தது. இதனால் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழையால் குமரி மாவட்டத்தில் குளிரான தட்பவெப்பம் நிலவியது. நேற்று பகலில் வெயிலின்றி மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இடைவிடாது சாரல் மழை பொழிந்த நிலையில் அவ்வப்போது கனமழை கொட்டித் தீர்த்தது. அதேநேரம் மழையுடன் காற்று இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கீரிப்பாறை, குற்றியாறு உட்பட மலை கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

மாவட்டம் முழுவதும் ரப்பர் பால்வெட்டும் தொழில், கட்டிடத் தொழில், மீன்பிடி தொழில் போன்றவை முடங்கின. குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமங்கள் மற்றும் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம், சின்ன முட்டம் மீன் பிடி துறைமுகங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள், நாட்டுப் படகுகள் அனைத்தும் கரைகளிலும், மீன்பிடி துறைமுக தங்கு தளங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன.

மாவட்டம் முழுவதும் மழையால் ஓடு, மற்றும் மண் சுவரினால் ஆன 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் தாழக்குடி மீன மங்கலத்தை சேர்ந்த வேலப்பன்(60) என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கியபோது சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வேலப்பன் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஒழுகினசேரி, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, குலசேகரம், குளச்சல், தக்கலை அகஸ்தீஸ்வரம், குண்டல், கோட்டாறு ரயில் நிலைய பகுதி, ஊட்டுவாழ்மடம் உட்பட மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களை மழைநீர் சூழ்ந்தது. இதனால் வேறு பகுதிக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து முடங்கி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

வள்ளியாறு, பழையாறு, கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு உட்பட மாவட்டத்தில் உள்ள ஆறு, கால்வாய்கள், கிளைக் கால்வாய்களில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. மாவட்டத்தில் உள்ள 2,040 பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. மழையை பயன்படுத்தி கும்பப்பூ சாகுபடி பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

தோவாளை செக்கர்கிரி மலை, சுங்கான்கடை மலை உட்பட பல மலை பாதைகளில் மழைக்கால அருவிகள் வெள்ளிநிறத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இவை சாலையை கடந்து சென்றதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தெற்கு குண்டல் உட்பட பல பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றதால் அவ்வழியாக சென்ற கல்லூரி மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர்.

மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்துக்கும் நேற்று விடுமுறை அளித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் மழை பாதிப்பில் இருந்து விடுபட்டனர். குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகள் மற்றும் நீர்நிலைகளை மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

திற்பரப்பில் குளிக்க தடை: குமரியில் கனமழை நீடித்து வரும் நிலையில் சிற்றாறு அணைப் பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியத்தில் இருந்து திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் நேற்று மாலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்வதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே, வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளைச் செய்து வருகிறது. மழை வெள்ளப் பாதிப்பை தடுக்கும் வகையில் தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் 8 தீயணைப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்திலும் மீட்பு கருவிகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்தது. இங்குள்ள ரப்பர் படகுகள் மிதவைக் கருவிகள் அனைத்தும் சரியான முறையில் உள்ளதா என பரிசோதித்து பார்க்கப்பட்டது.

இப்பணிகளை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார், உதவி அலுவலர் துரை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மழை பெய்து வருவதால் நீர்நிலைகளுக்கு சென்று செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அதோடு வெள்ளம் அதிகமாக செல்லும் காட்டுப் பகுதிகளுக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசியில்... - திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை நீடிப்பதை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 92.75 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 667 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 10 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 50.90 அடியாக இருந்தது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 28.75 அடியாக இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்தது. மதியத்துக்கு மேல் வானில் மேகம் திரண்டு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணையில் 31.40 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை, ராமநதி அணை, கருப்பாநதி அணையில் நீர்மட்டம் தலா 2 அடியும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 4 அடியும் உயர்ந்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்