விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளின் அடாவடி வசூல்: அரசு வேடிக்கை பார்ப்பதாக வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: அண்மையில் முடிவுற்ற தொடர் விடுமுறை நாட்களில் கடுமையாக உயர்த்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை செலுத்தி பயணித்த பொதுமக்கள், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண அரசு முயற்சிக்குமா என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.

விடுமுறை, விழா நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது தடுக்க முடியாததாக மாறிவிட்டது. இதனால்சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளில் கல்வி, பணி நிமித்தமாக தங்கியிருப்போர் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியே சொந்த ஊர் செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின்றனர். இதில் குடும்பமாக சொந்த ஊர் செல்ல விரும்புவோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏனெனில், சென்னையில் இருந்து சுமார் 600 கிமீ சென்று திரும்ப 3 உறுப்பினர் உள்ள குடும்பத்தினர் குறைந்தபட்சமாக பேருந்து கட்டணத்துக்காக மட்டும் ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கிறது. குறிப்பாக அண்மையில் முடிவுற்ற விடுமுறை நாட்களில் நாகர்கோவிலில் இருந்து சென்னை திரும்ப ரூ.4,700 கட்டணம் அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், நெல்லைக்கு ரூ.4 ஆயிரம், கோவைக்கு ரூ.5 ஆயிரம் என ரொக்கமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தால், சேமிப்புகளை பயணச்சீட்டுக்காக செலவழிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். இவ்வாறு விமான கட்டணத்துக்கு இணையாக வசூலிக்கப்பட்ட ஆம்னி பேருந்து கட்டணம், பெரும்பாலானோரின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளதை அவர்களது குமுறல்கள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.

இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் காளிராஜ் கூறியதாவது:

ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சொந்த ஊரான தென்காசி செல்கிறோம். எத்தனை நாட்கள் முன்பாக திட்டமிட்டாலும் ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. தற்போது குழந்தைகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் ஊருக்கு சென்றுவிட்டோம். ஆனால், சென்னை திரும்பும்போது ஆம்னி பேருந்துகள் நிர்ணயித்த கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறிவிட்டேன். இருக்கையில் பயணிக்கவே ஒருவருக்கு ரூ.1500 செலுத்த வேண்டியிருந்தது. எனது வருமானத்துக்கு சற்று சமாளித்து வந்து சேர்ந்துவிட்டேன்.

இதுவே மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் பெறும் ஒருவருக்கு ஊர் செல்வதே எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. ஏன் தனியார் பேருந்தை நாடுகிறீர்கள், சொகுசு வசதிக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது போன்ற கருத்துகளை முன்வைக்கலாம். ஆனால், 8 மணிநேரம் அமர்ந்து செல்ல முடியாத பெரும்பாலானோர் படுக்கை வசதியுடன் அதிகளவில் இயங்கும் ஆம்னி பேருந்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டது. அரசு கண்காணிப்பில் இருக்கும்போதும்கூட கட்டணத்தை கட்டுக்குள் வைக்கத் தவறியது யார்? எங்களது இன்னலை ஏன் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக போக்குவரத்து ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், "தனியார் நிறுவனசெயலி மூலமாகவே இருக்கை முன்பதிவுசெய்யப்படுகிறது. எனவே, அச்செயலிகளுக்கு அரசு சார்பில் தக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க முடியும். கடந்த காலங்களில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன" என்றனர்.

கட்டணம் தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் தெரிவிக்கையில், "ஆம்னி பேருந்துகளுக்கு உரிமையாளர்கள் தரப்பில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சங்க விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சங்கம் ஒத்துழைப்பு வழங்கும்" என்றார்.

இப்பிரச்சினை தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க சட்டத்தில் வழிவகை இல்லை. ஒரு சிலரே அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். தற்போது விதிமீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரம், பொதுமக்களுக்கு போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE