ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம்: அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்துக்கு ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு பதில் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக மன்னிப்பு கேட்பதுடன் ரூ. 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் பதில் நோட்டீஸ் பிறப்பித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க (அசிகான் - 2018) தேசிய மாநாட்டுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் போலீஸார் உரிய அனுமதி வழங்காததால் அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட ரூ.29.50 லட்சத்தை திருப்பிக்கேட்டபோது அதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கிய காசோலை பணமின்றி திரும்பியதாக கூறப்படுகிறது.

அதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக புகார் அளிக்கப்பட்டது. மேலும், அந்த சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் ஷப்னம் பானு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் அந்த நோட்டீஸூக்கு பதிலளிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் தற்போது அந்த சங்கத்துக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-ல் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்ட அசிகான் - 2018 அமைப்புக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஏ.ஆர்.ரஹ்மான் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை. மூன்றாவது நபர்களிடம் இதற்கான தொகையை கொடுத்துள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், தேவையில்லாமல் ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பியுள்ள வழக்கறிஞர் நோட்டீஸை 3 நாட்களில் திரும்பப் பெற்று மன்னிப்பு கோர வேண்டும். அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.10 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் உரிமையியல் மற்றும் குற்றவியல் ரீதியாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு வழக்கறிஞர் நர்மதா சம்பத் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE