ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் 50% வரை குறைப்பால் மக்கள் தவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மக்களுக்குப் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டுவருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டர்பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பால் கொழுப்புச் சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை,நீல நிற பாக்கெட்களில் அடைத்துவிற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 15 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் நேரடி ஆவின் பாலகங்கள், பால் முகவர்கள் ஆகியோருக்கு பச்சை நிற பால் பாக்கெட் (4.5% கொழுப்புச் சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பால்) விநியோகம் 50 சதவீதம்வரை குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.3 விலை குறைப்பு: திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, பச்சை நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டு ரூ.44 என நிர்ணயம் செய்யப்பட்டது. இது 500 மிலி ரூ.22-க்குவிற்பனை செய்யப்பட்டது. இந்தபால் விற்பனை வாயிலாக ஆவினுக்கு லிட்டருக்கு ரூ.7 நஷ்டம்ஏற்படுகிறது.

இதைக் காரணம் காட்டி, பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, ஊதா நிற பசும்பால் பாக்கெட் (சமன்படுத்தப்பட்ட பால்) அனுப்பப்பட்டது. இந்த பால் 3.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்டது. விரைவில் பச்சை நிற பால் பாக்கெட்விநியோகம் 70 சதவீதம் வரைகுறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், பால் முகவர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சென்னையில் பால் முகவர்கள் கூறியதாவது: ஆவின் பால் கொள்முதல் குறைந்து வருவதால், பச்சை நிற பாக்கெட் பால் விநியோகம் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, நீல நிற பாக்கெட்பால் வழங்கி வருகின்றனர்.இது பச்சை நிற பாக்கெட் பாலை விட கொழுப்புச் சத்து குறைந்தது.

இதனால், தனியார் நிறுவனத்தின் பால் பாக்கெட்களை மக்கள் நாடிச் செல்லும் நிலை உள்ளது.எனவே, பச்சை நிற பாக்கெட்பால் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

ஆவின் நிர்வாகம் மறுப்பு: இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினீத்கூறும்போது, ``எல்லா வகை பால் பாக்கெட்களையும் பொதுமக்களுக்கு தடையின்றி கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சந்தையில் தேவைக்கு ஏற்ப, சில வகைபால் பாக்கெட்கள் அதிகம் விநியோகம் செய்யப்படும்.

ஆனால், எந்தவகை பால் பாக்கெட்கள் விநியோகத்தையும் குறைக்கவில்லை. அதேநேரத்தில், நீல நிற பாக்கெட் பாலுக்கு அதிக வரவேற்பு உள்ளதால், அதிகமாக விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் பால் கொள்முதல் குறையவில்லை. தினசரி 30 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE