கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிவாரணப் பொருட்கள் பெறப்படும் அறை திறக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், 29-ம் தேதி ‘ஒக்கி‘ புயலாக உருவெடுத்தது. தொடர்ந்து அதே இடத்தில் புயல் மையம் கொண்டிருந்ததால், அன்று நள்ளிரவு முதல், வியாழக்கிழமை மாலை வரை 80 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று இம்மூன்று மாவட்டங்களையும் தாக்கியது. தொடர்ந்து கனமழை கொட்டத் தொடங்கியது.
குறிப்பாக ஒக்கி புயலின் தாண்டவத்தால் கன்னியாகுமரி மாவட்டம் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குமரி ஆட்சியர் அலுவலகத்தில் நிவாரணப் பொருட்கள் பெறப்படும் அறை திறக்கப்பட்டுள்ளது.
எண்கள் அறிவிப்பு
இதற்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9488078666, 9445000392 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பவில்லை.
தரைப்பாலம் நீரில் மூழ்கியது
பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் மலவிலை அருகே உள்ளே தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
நாகர்கோவிலின் புனித சவேரியார் கோயிலில் டிசம்பர் 4-ம் தேதி திருவிழா தொடங்குகிறது. இதற்காக வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புனித சவேரியார் கோயில் மற்றும் நாகர்கோவிலின் முக்கியக் கோவிலான நாகராஜா கோயிலிலும் முதல்கட்டமாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நகரின் மற்ற அனைத்து இடங்களிலும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. கன்னியாகுமரியின் எந்தப் பகுதியிலும் இதுவரை மின்சாரம் வரவில்லை.
ஓரளவு சீரடைந்த போக்குவரத்து
சில ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து ஓரளவு சீர் செய்யப்பட்டுள்ளது. லாரிகளில் பொருட்கள் வரத் தொடங்கியுள்ளன.
பெருஞ்சாணி அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 78 அடி கொள்ளளவு கொண்ட அணையில் நேற்று (வெள்ளிக்கிழமை) 76 அடி நீர் நிரம்பியது. இதனையடுத்து சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணை திறக்கப்பட்டது.
நாகர்கோவில் நகராட்சி முழுவதற்கும் குடிநீர் வழங்கும் முக்கடல் அணை, தனது முழுக் கொள்ளளவை எட்டியது. 25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை, இரண்டு ஆண்டுக்ளுக்குப் பிறகு முழுமையாக நிரம்பியுள்ளது.
எனினும் மின்சாரம் இல்லாததால் நாகர்கோவிலில் தண்ணீர் விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனிடையே ஜெனரேட்டர்கள் வாடகைக்கு விடும் போக்கு அதிகரித்துள்ளது. மோட்டார் மூலம் தொட்டிக்கு நீர் ஏற்ற, செல்பேசிகளுக்கு சார்ஜ் ஏற்ற உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜெனரேட்டர் வாடகைக்கு விடப்பட்டது. இதற்காக அரை மணி நேரத்துக்கு ரூ.400 வசூல் செய்யப்பட்டது. டார்ச் லைட் வியாபாரமும் கன்னியாகுமரியில் சூடுபிடித்துள்ளது.
அமைச்சர், ஆட்சியர் ஆய்வு
இதற்கிடையே மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ஆட்சியர் மற்றும் தொகுதி எம்.பி. ஆகியோர் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago