சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்லும் - புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: "சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்தியாவில் உள்ள மக்களை சாதி ரீதியாக பார்த்துதான், அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறுவது, இந்தியாவை அரசியல்வாதிகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதாகவே கருத வேண்டியுள்ளது" என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

சென்னையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் ஆதரிக்கவில்லை. சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் முடிந்து 77வது ஆண்டில் இருந்து வருகிறோம். இன்னும் இந்தியாவில் உள்ள மக்களை சாதி ரீதியாக பார்த்துதான், அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறுவது, இந்தியாவை அரசியல்வாதிகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதாகவே கருத வேண்டியுள்ளது.

மக்களைத் தொடர்ந்து சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக பிரிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது கிடையாது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவமும், சம உரிமையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளாட்சியில் இருந்து மத்திய அரசு வரைக்கும் உண்டு. எனவே, மக்களுக்கானத் தேவைகளை உள்ளாட்சி அமைப்புகளும், மத்திய மாநில அரசுகளும் செய்ய தவறிவிட்டு, சாதி ரீதியாக கணக்கெடுப்பதன் மூலம் என்ன சொல்ல வருகின்றனர்? இதன்மூலம் பொதுமக்களுக்கு என்ன சொல்ல வருகின்றனர்?

ஆட்சியாளர்கள், ஆட்சியதிகாரத்தில் இருந்துகொண்டு அவர்கள் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறிவிட்டு சாதிவாரி கணக்கை வெளியிடுவதன் மூலம் யாருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்தியாவை துண்டாடக்கூடியது. மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் பிளவு எண்ணங்களை உருவாக்கக்கூடியது. இது ஒரு தவறான நடைமுறை" என்றார்.

அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அகில இந்திய அளவில் பாஜக தலைமையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணியில் இருந்தோம்.

இந்நிலையில், தமிழகத்தில் கூட்டணிக்குத் தலைமை தாங்கியவர்களே, கூட்டணியில் தாங்கள் இல்லை என்று சொல்லிவிட்டப்பிறகு, கூட்டணியை பழைய நிலையில் பார்க்கமுடியாது.புதிதாகத்தான் பார்க்க முடியும். அதிமுகவின் முடிவு அதுவாக இருந்தால், அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி இன்று இல்லை என்பது பொருளாகிறது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE