தமிழகத்தை சேர்ந்த 9 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: விண்வெளி துறையில் முத்திரை பதித்த தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேரையும் கவுரவித்து, அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். முதுநிலை பொறியியல் படிக்கும் 9 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானிகளின் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க ரூ.10 கோடி தொகுப்பு நிதியம் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ளஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தமிழக உயர்கல்வித் துறை சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்’ என்ற பெயரில், சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.

இதில், இந்திய விண்வெளி ஆய்வுநிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள்தலைவர் கே.சிவன், திட்ட இயக்குநர்கள் மயில்சாமி அண்ணாதுரை (சந்திரயான்-1), மு.வனிதா (சந்திரயான்-2), ப.வீரமுத்துவேல் (சந்திரயான்-3), நிகார் ஷாஜி (ஆதித்யா-எல்1), திருவனந்தபுரம் திரவ உந்து அமைப்புமையத்தின் இயக்குநர் வி.நாராயணன், ஹரிகோட்டா சதீஷ் தவான்ஆய்வு மையத்தின் இயக்குநர் ஏ.ராஜராஜன், பெங்களூரு யு.ஆர்.ராவ் செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநர் எம்.சங்கரன், மகேந்திரகிரி உந்துவிசை வளாக இயக்குநர் ஜெ.ஆசிர் பாக்கியராஜ் ஆகியோரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

விழாவில் முதல்வர் பேசியதாவது: நிலவை தொட்ட 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மற்ற நாடுகளுக்கு இல்லாத சிறப்பாக, இதுவரை அறியப்படாத நிலவின் தென்துருவத்தை சந்திரயான்-3 தரையிறங்கி ஆராயத் தொடங்கியுள்ளது. அதன் திட்ட இயக்குநராக வீரமுத்துவேல் பணியாற்றியது நமக்கு பெருமை.

விருப்பு வெறுப்பற்ற அறிவியல் அறிவுதான் தமிழகத்தில் இருந்தது. அதுதான் பல அறிவியல் மேதைகளை உருவாக்கியுள்ளது. இங்குகவுரவிக்கப்பட்டுள்ள 9 விஞ்ஞானிகளில் 6 பேர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள். குறிப்பாக 2 பேர்பெண்கள் என்பது பெருமைக்குரியது.

சந்திரயான்-1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார். கடந்த 2008 அக்.28-ம் தேதி அது நிலவை சுற்றியதும், நிலவில் நீர்க்கூறுகள் இருப்பதை கண்டறிந்து சொன்னது. சந்திரயான்-2 கடந்த 2019 ஜூலை 15-ம் தேதி ஏவப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக வனிதா செயல்பட்டார். இஸ்ரோ தலைவராக சிவன் இருந்தார். தற்போது ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல். இவர்களால் தமிழகத்துக்கே பெருமை.

இதை போற்றும் விதமாக, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்த, இனியும் தேடித் தரப்போகிற அறிவியல் மேதைகளான 9 பேருக்கும், தமிழக அரசுசார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். உங்கள் அறிவாற்றலுக்கு அளவுகோல் இல்லை. உங்கள் உழைப்புக்கான அங்கீகாரத்தின் அடையாளமாக தமிழக அரசு இதைவழங்குகிறது. இதை ஏற்றுக்கொண்டு, நாட்டுக்கு மேலும் மேலும் நீங்கள் பெருமை சேர்க்க வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில், அரசின் கல்வி உதவித் தொகை பெற்று இளநிலை பொறியியல் முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பை தொடரும் 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகளின் பெயரில் கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்க உள்ளோம். இதன்மூலம் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் அவர்களுக்கு வழங்கப்படும். விஞ்ஞானிகள் தலைமையில் அமைக்கப்படும் குழுக்களால், தகுதிவாய்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்காக ரூ.10 கோடியில் தொகுப்பு நிதியம் உருவாக்கப்படும்.

தற்போது நடந்து வரும் இந்த நிகழ்வை 58 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்க்க அரசுஏற்பாடு செய்துள்ளது. இதை பார்க்கும் மாணவர்கள் தங்கள் அறிவியல் ஆர்வத்தையும், ஆளுமைத் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேடையில் உள்ள ஆளுமைகளை போன்ற அறிவியல் மேதைகள் இன்னும் பலர் உருவாகவேண்டும். அதுதான் இந்த அரசின் நோக்கம்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகள். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில், சாய்ராம் கல்வி குழுமம் சார்பில், முதல்வர் ஸ்டாலினுக்கும், தங்கள் கல்லூரியில் படித்த சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. விஞ்ஞானிகள் சார்பில்முதல்வருக்கு நினைவு பரிசை நாராயணன் வழங்கினார். துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உயர்கல்வித் துறை செயலர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்