தடுப்பணை தூர்வாரும் பணிக்கு குறைந்த ஊதியம்: காட்டுப்பட்டி மலைவாழ் மக்கள் புகார்

By செய்திப்பிரிவு

உடுமலை: உடுமலை அருகே மலை கிராமத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை தூர்வாரும் பணியில், மலைவாழ் மக்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்டு காட்டுபட்டி மலை கிராமம் உள்ளது. அங்கு, மழைக்காலங்களில் கிடைக்கும் மழை நீரை சேகரிக்க உதவும் வகையில், 2 இடங்களில் தடுப்பணைகள் உள்ளன. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், ஆற்றில் அடித்துவரப்பட்ட வண்டல் மண், குப்பை, கூழங்கள் சேர்ந்து, தடுப்பணையின் உயரம் குறைவாக மாறியது.

மழைக் காலங்களில் முழுமையாக நீரை சேகரிக்க முடிவதில்லை. குறைவான நீர் உடனடியாக நிரம்பிவிடுவதும், விரைவிலேயே முழுமையாக வற்றிவிடுவதும் உண்டு. இதனால், அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு, விலங்குகள் தண்ணீருக்காக தவிக்கும் நிலையும் உருவானது.

இதை கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன் இவ்விரு தடுப்பணைகளையும் தூர்வார வனத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் ஒப்பந்ததாரரிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளபோதும், அங்குள்ள மலை வாழ் மக்களுக்கு தூர்வாரும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு ஈடுபட்டுள்ள மலைவாழ் மக்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, "பல ஆண்டு கோரிக்கையின் பயனாக, தலா ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் இரு தடுப்பணைகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 அடி ஆழமும், 25 அடி நீளமும் கொண்ட தடுப்பணைகளில் முழுவதுமாக வண்டல் மண் நிறைந்துள்ளது. இவற்றை அகற்ற, அதே பகுதியைச் சேர்ந்த மலை வாழ் ஆண்கள், பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை பணி செய்ய வேண்டும். இதற்காக ஆண்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500, பெண்களுக்கு ரூ.200 ஊதியமாக அளிக்கின்றனர். இந்த ஊதியம் போதாது, உயர்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

மாவட்ட உதவி வன அலுவலர் கணேஷ் ராமிடம் கேட்டபோது, "இது குறித்து எங்களுக்கு புகார் வரவில்லை. மலைவாழ் மக்கள் ஏற்கெனவே அதிகமான ஊதியத்தில் பிற வேலைகளுக்கு செல்லும் நிலையில், குறைவான ஊதியத்துக்கு சம்மதித்து பணியாற்ற வாய்ப்பில்லை. எனினும், இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE