வண்டலூர் பூங்காவில் வன உயிரின வார விழாவை ஒட்டி சிங்கம், மான் உலாவிடங்களுக்கு செல்லும் சேவை தொடக்கம்: அமைச்சர் ம.மதிவேந்தன் தொடங்கிவைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேற்று நடைபெற்ற வன உயிரின வார விழா தொடக்க விழாவில், பூங்காவின் சிங்கம் மற்றும் மான் உலாவிடங்களுக்கு பார்வையாளர்கள் செல்லும் சேவை தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு வனத்துறை சார்பில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேற்று வன உயிரின வார விழா தொடக்கப்பட்டது. வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்று விழாவைத் தொடங்கிவைத்தார். பூங்காவில் சிங்கம் மற்றும் மான்கள் உலாவிட பகுதிகளுக்குப் பார்வையாளர்கள் செல்வதற்கான ஏசி பேருந்து வசதி, கியூஆர் குறியீடு மூலம் நுழைவுச் சீட்டு பெறும் வசதி ஆகியவற்றை தொடங்கிவைத்தார். பின்னர், பூங்காவின் வனவிலங்கு மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை அரங்கைத் திறந்துவைத்தார்.

பின்னர், முதுமலை புலிகள் காப்பகத்துக்கான புதிய இணையதளத்தையும் அமைச்சர் திறந்துவைத்தார். இந்த இணையதளம், காப்பகங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதுடன், ஓய்வு இல்லங்கள் மற்றும் வனச்சுற்று போன்ற வசதிகளை ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் நினைவுப் பொருட்களை ஆன்லைனில் வாங்கும் வகையில் புதிய இணையதளத்தையும் அவர் தொடங்கிவைத்தார். விழாவில், ‘கழுவேலி மற்றும் உசுடு பறவைகள் சரணாலயங்கள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.

வண்டலூர் பூங்காவில் சிங்கம் மற்றும் மான் உலாவிடம் 147 ஏக்கர் பரப்பளவில் புதர் காடுகளுடன் அமைந்துள்ளது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சிங்கம் மற்றும் மான் உலாவிடம் மூடப்பட்டது. இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த உலாவிடத்தில் 3 ஆண், 4 பெண் என 7 சிங்கங்கள் உள்ளன. பன்னர்கட்டா மற்றும் லக்னோ உயிரியல் பூங்காவிலிருந்து 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மான் உலாவிடப் பகுதியில் ஏராளமான கடமான், புள்ளி மான் மற்றும் கேளையாடு மான்கள் உள்ளன.

இவ்விழாவில் காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, வனத் துறை தலைவர் சுப்ரத் மஹாபத்ரா, தலைமை வன உயிரின காப்பாளர் சீனிவாஸ் ரெட்டி, உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவன இயக்குநர் ஏ.உதயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE