மாணவர் செயல்பாடுகளை கண்காணிக்க அரசு பள்ளிகளில் ஒழுங்கு நடவடிக்கை குழு: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்கள் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் மாணவர்களின் ஒழுங்கு கட்டுப்பாட்டைபராமரித்து, பள்ளி பொது நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. பாடவேளையில் வகுப்பை புறக்கணித்து பள்ளி வளாகம், மைதானம், பிற இடங்களில் நடமாடும் மாணவர்களை கண்டித்து வகுப்புக்குச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதவிர ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் 45 நிமிடங்கள் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் (6 முதல் பிளஸ் 2 வரை) ஆசிரியர்களின் உதவியோடு கூட்டுப்பயிற்சி அளிக்க வேண்டும். கல்வியாண்டின் தொடக்கத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உலக திறனாய்வு போட்டிகள்நடத்தி தகுதிபெறும் மாணவர்கள்பட்டியலை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

ஆண்டுதோறும் பள்ளியில் மாணவர்கள் விளையாட தேவையான உபகரணங்களை தலைமையாசிரியர்கள் மூலம் பெற்று முறையாக உரிய பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். மாதம் ஒரு முறை பாடக்குறிப்பு கண்டிப்பாக எழுதி, அதன் அடிப்படையில் உடற்பயிற்சி அளிக்க வேண்டும்.

பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களை கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE