சென்னை: மக்களவை தேர்தலில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தால், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர் மற்றும் தோல்விக்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட செயலாளர் நீக்கப்படுவார். தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டால், அமைச்சர், மூத்த நிர்வாகி என பார்க்க மாட்டேன் என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் முனைப்பில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ‘இண்டியா’ கூட்டணியை அமைத்துள்ளன. இக்கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிலையில், தற்போது தொகுதி பங்கீடு தொடர்பாக அடுத்தகட்ட ஆலோசனை நடந்து வருகிறது.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்தில் இருந்தபடி இக்கூட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசியதாவது:
» காவிரியில் நீர்வரத்து 3,446 கனஅடியாக சரிவு: மேட்டூர் அணை நீர்மட்டம் 36.94 அடி
» ''வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்'' - ஆர்.பி. உதயகுமார் சாடல்
பொது முக்கியத்துவம் வாய்ந்த சில கருத்துகளை பரிமாறிக்கொண்டு, விரைந்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். கடந்த மக்களவை தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 தொகுதிகளை வென்றோம் என்றால், எதிர்வரும் மக்களவை தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவே இண்டியா கூட்டணியை அமைத்துள்ளாம். தேசிய, மாநில ஆளும் கட்சிகள், வலுவான மாநில கட்சிகள் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
‘மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது. இண்டியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்’ என்ற கருத்து பரவலாக ஏற்பட்டுவிட்டது. இந்த நேரத்தில், நமது பொறுப்பு, கடமை அதிகமாகியுள்ளது.
மக்களவை தேர்தல் பணியை 6 மாதம் முன்பே நாம் தொடங்கிவிட்டோம். நமது வெற்றிக்கு அடித்தளமாக விளங்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்தோம். அவர்களுக்கு 3 பயிற்சி பாசறை கூட்டங்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. அடுத்ததாக திருவண்ணாமலையில் வடக்கு மண்டல பயிற்சி பாசறை கூட்டமும், சென்னையில் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டமும் நடக்க உள்ளன. நான் சொன்னதை தொடர்ந்து கூறிவருவதை செயல்படுத்தினாலே, முழு வெற்றியை அடையலாம். எந்த ஒரு தனிமனிதரையும்விட இயக்கமும், இயக்கம் அடைய வேண்டிய வெற்றியும்தான் முக்கியம்.
மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதை வாக்குகளாக மாற்ற திட்டமிட்டு உழையுங்கள். உழைப்பும், செயல்பாடும்தான் வெற்றியை பெற்றுத் தரும். திமுக கூட்டணி அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற பாடுபடுங்கள்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதற்கிடையே, பல்வேறு மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளையும் முதல்வர் கேட்டறிந்தார். கட்சி பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக குறிப்பிட்ட சிலரிடம் விசாரித்தார். சிலர் தங்கள் பகுதிக்கு கூடுதல் நிர்வாகிகளை நியமிக்க அனுமதி கோரினர். கட்சியினரின் செயல்பாடுகள் குறித்த பொதுவான கருத்துகளையும் கூறினர். அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் உள்ள விதிகளை தளர்த்துமாறு சிலர் கோரிக்கை விடுத்தனர்.
இதன் பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், தான் ஏற்கெனவே அறிவுறுத்தியும், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமன விஷயத்தில் மெத்தனமாக செயல்பட்டு வருவதாகவும், இது நல்லது கிடையாது என்றும் 3 அமைச்சர்கள் உள்ளிட்ட 7 மாவட்டச் செயலாளர்களை குறிப்பிட்டு எச்சரித்துள்ளார். இதற்காக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் கண்டிப்புடன் கேட்டுள்ளார்.
“மக்களவை தேர்தலில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தால், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர் மற்றும் தோல்விக்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டச் செயலாளர் நீக்கப்படுவார். தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டால், அமைச்சர், மூத்த நிர்வாகி என பார்க்க மாட்டேன்” என்றும் எச்சரித்துள்ளார்.
“சில இடங்களில், தொகுதி பொறுப்பாளர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் ஒத்துழைப்பும், உரிய மரியாதையும் தருவது இல்லை என புகார்கள் வருகின்றன. மாவட்டச் செயலாளர்கள் இனியாவது சரியாக நடந்துகொள்ள வேண்டும். தொகுதி பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கியுள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாரம் ஒருமுறை சென்று மக்களவை தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகிகளின் களப் பணிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்” என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago