போக்குவரத்து கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்க, பேருந்து கட்டண உயர்வு உள்ளிட்ட 8 பரிந்துரைகளை தலைமை அதிகாரிகள் குழு தயாரித்துள்ளது. இந்த பரிந்துரைகள் விரைவில் தமிழக அரசிடம் வழங்கப்பட உள்ளது. எனவே, ஆர்.கே.நகர் தொகுதி இடைததேர்தலுக்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் போக்குவரத்தை நாட்டுடைமை ஆக்கிய பிறகு, குறைந்த கட்டணத்தில் மக்கள் பயணம் செய்யும் வசதி, வேலைவாய்ப்பு, அரசுக்கு வருவாய் என பல நன்மைகள் கிடைத்தன. அதிக வரி வருவாயும் கிடைத்ததால், முதல் 20 ஆண்டுகளில் நல்ல லாபமும் ஈட்டியது. அரசின் நிதி உதவி இல்லாமலேயே 18 ஆயிரம் அரசு பேருந்துகள், ஏராளமான பணிமனைகள், தலைமையக கட்டிடங்கள் என விஸ்வரூப வளர்ச்சியைப் பெற்றது.
ஆனால், தற்போது போக்குவரத்துத் துறை ரூ.35 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கிறது. நிதி நெருக்கடி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால், பேருந்து போக்குவரத்து மீண்டும் தனியாரின் கைக்கு சென்று விடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுத்து சிறப்பாக செயல்பட வைப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த சில மாதங்களாக போக்குவரத்துத் துறை செயலாளர் டேவிதார், மாதந்தோறும் தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அடுத்தகட்டமாக சென்னை, விழுப்புரம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் கடந்த 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை போக்குவரத்து கழகங்களின் தலைமை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து பேருந்து கட்டணத்தை உயர்த்துவது, அதற்காக தனி ஆணையம் அமைத்தல், முதல்கட்டமாக 2 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குதல், 8 போக்குவரத்து கழகங்களை நான்காக மாற்றியமைத்து ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தல், போக்குவரத்து துறை ஊழல் தடுப்பு பிரிவில் நியமிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை காவல் துறைக்கே மாற்றுதல் என்பன உட்பட மொத்தம் 8 பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டன. இந்த பரிந்துரைகளை தமிழக அரசிடம் விரைவில் அளித்து, ஒப்புதல் பெறவும் அந்தக் குழு முயற்சித்து வருகிறது. எனவே, ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகு போக்குவரத்து துறையில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என அதிகாரிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் அரசு போக்குவரத்து கழகங்களின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் இயக்கப்படும் 23,500 அரசுப் பேருந்துகளில் தினமும் 2.5 கோடி பேர் பயணம் செய்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து கழகங்களின் நிதி நெருக்கடி அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளாக புதிய பேருந்துகளை வாங்காமல் இருப்பதால், காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை 70 சதவீதமாகி விட்டது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் பேருந்துகளின் உதிரி பாகங்கள், பராமரிப்பு செலவு ஆகியவை 40 சதவீதம் அதிகரித்துவிட்டது. டீசல் விலையும் ரூ.20 உயர்ந்துள்ளது. இதனால், போக்குவரத்துக் கழகங்கள் கடும் நெருக்கடியில் உள்ளன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு குறைந்த அளவில் கட்டணத்தை உயர்த்துவது, கட்டணத்தை மாற்றியமைக்க புதிய ஆணையம் அமைத்தல் உட்பட 8 பரிந்துரைகளை தயாரித்துள்ளோம். இவற்றை விரைவில் தமிழக அரசிடம் அளித்து ஒப்புதல் பெறவுள்ளோம். இல்லாவிட்டால், போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த அரசு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்துவோம். சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில், போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தை சிறப்பாக நடத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகளும் உத்தரவிட்டுள்ளனர். எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு போக்குவரத்துத் துறையில் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் ஜெ.லட்சுமணனிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் போக்குவரத்துக் கழகங்களை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். டீசல் விலை உயர்வுக்கான மானியத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். கட்டண உயர்வை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், மாற்று வழிகளிலும் வருவாயை பெருக்க அரசு முயற்சிக்க வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
15 hours ago