இந்தியாவில் கல்வி வணிகமயமாகிவிட்டது - முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனை

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: இந்தியாவில் கல்வி பெயரளவில் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் முழுக்க முழுக்க கல்வி தனியாரின் கட்டுப்பாட்டில் வணிகமயமாகி வருகிறது என முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனையுடன் தெரிவித்தார்.

மதுரையில் இன்று மக்கள் கல்விக்கூட்டியக்கம் சார்பில் ஆசிரியர்களின் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ரா.முரளி முன்னிலை வகித்தார். அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் ம.சிவராமன் வரவேற்றார். இதில் ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் மாநாட்டை தொடங்கிவைத்து பேசியதாவது: ''இந்தியாவில் கல்வி பெயரளவில் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் மேலைநாடுகள் கல்வியை அரசின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கும்போது அதில் இடம் பெற்றவர்களில் அம்பேத்காரைத் தவிர மற்றவர்கள் உயர்சாதியினர் என்பதால் கல்வி உயர்சாதியினருக்கு மட்டும்தான் என்ற உள்நோக்கத்தோடு வரையறுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கல்வி என்பது அடிப்படை உரிமை இல்லை. ஆனால் கல்வி நிலையங்களை ஏற்படுத்துவது அடிப்படை உரிமையாக உள்ளது. எனவே இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கல்வி பெயரளவில் மட்டுமே உள்ளது. இதனால் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கல்வி உள்ளதால் பெரும் வணிகமயமாகிவிட்டது. இதில் ஆசிரியர்கள் கொத்தடிமைகள் போல் உள்ளனர். ஆனால் மேலைநாடுகளில் முழுக்க, முழுக்க கல்வி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் வளர்ச்சியை நோக்கி அந்த நாடுகள் செல்கின்றன. இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகுகின்றன.

இதில் அனைத்து துறைகளிலும் அவுட்சோர்சிங் என்ற முறையில் தனியார்மயமாகிவருகிறது. இதில் மத்திய, மாநில அரசுகளில் 90 சதவீதம் ஒப்பந்தமுறைக்கு மாறிவருகிறது. ரயில்வேயில் 18 லட்சம் தொழிலாளர்கள் இருந்தால் 7லட்சம் தொழிலாளர்கள் ஒப்பந்தத்தொழிலாளர்களாக உள்ளனர். தனியார் மயமே சிறந்ததென உளவியல் ரீதியாக நம்மீது திணிக்கிறார்கள். அதில் ஆசிரியர்கள் கொத்தடிமைகள்போல் உள்ளனர். எந்தவொரு உரிமைகளையும் போராடித்தான் பெற வேண்டும். அதற்கு சங்கங்கள், அமைப்பு ரீதியாக ஒன்றிணைய வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலும் ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்தே தனியார் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளனர்." இவ்வாறு ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்தார்.

இதில், மூட்டா பொதுச்செயலாளர் எம்.நாகராஜன், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக்குழு சே.வாஞ்சிநாதன், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் மாவட்டப் பொதுச்செயலாளர் என்.பெரியதம்பி உள்பட பலர் பங்கேற்று பேசினர். இதில் 4 அமர்வுகளில் கூட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் சு.உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE