உதயநிதிக்கு எதிரான வழக்குகள்: ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கருத்து

By கி.மகாராஜன் 


மதுரை: அமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையில் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரங்கக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சை அரசியலுக்காக இந்தியா முழுவதும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சனாதனத்தை ஆதரிக்க சிலருக்கு உரிமை இருப்பது போல், அதை எதிர்ப்பதற்கும் உரிமை உண்டு.

அம்பேத்கர் போல் சாதி அமைப்பை கடுமையாக சாடியவர் யாரும் கிடையாது. மத்திய அரசு 2019ல் வெளியிட்ட அம்பேத்கர் புத்தகத்தில் சனாதனத்துக்கு எதிரான அவரது 22 உறுதிமொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழிகளை அம்பேத்கர் சிலைகளில் அச்சிட வேண்டும்.

சனாதனத்தை ஒழிப்போம் என்றால் சாதி அமைப்புகளை ஒழிப்போம் என்பது தான் அர்த்தம். ஒழிப்போம் என்றால் கொலை செய்வோம் என அர்த்தம் இல்லை. எதிர்ப்போம் என்பதே பொருள். சனாதனம் என்பது வேறு, சனாதனிகள் என்பது வேறு. சனாதனத்தை ஒழிப்போம் என்று தான் உதயநிதி பேசியுள்ளார். சனாதனிகளை ஒழிப்போம் என அவர் பேசவில்லை.

இந்த விவகாரத்தில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்யவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிப்பது வேதனை தருகிறது. சென்னை உயர் நீதிமன்றமாக இருந்தால் வழக்கு ஒரு நிமிடத்தில் தூக்கி வீசப்பட்டிருக்கும்.

அனைவருக்கும் கருத்துரிமை உண்டு. கருத்தை கருத்துகளால் எதிர்கொள்ள வேண்டும். கருத்துரிமை வழக்கில், அரசியலமைப்பு சட்டத்தை எதிர்த்துகூட கருத்து சொல்லலாம். அந்த கருத்தை அமைதியாக சொல்ல வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் உதயநிதிக்கு எதிரான வழக்குகள் கருத்துரிமைக்கு எதிரானவை. அந்த வழக்குகள் விசாரணைக்கு தகுதியற்றவை. தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறுகையில், "சனாதனத்துக்கு எதிராக பேசியதற்காக வழக்கு பதிவு செய்வதாக இருந்தால் புத்தர், அசோகர், பசவா, வள்ளலார், நாராயணகுரு, பெரியார், அம்பேத்கர் மீது தான் முதலில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஒரு பேச்சு என்ன பொருளில் புரியப்பட வேண்டுமோ, அந்தப் பொருளில் தான் புரியப்பட வேண்டும். சனாதனம் சரி என ஆளுநர் பேசும்போது, அது தவறானது என பேசுவதற்கு உரிமை உண்டு. அமைச்சர் உதயநிதி பின்வாங்க தேவையில்லை.

ஒட்டுமொத்த தமிழ்நாடும், வழக்கறிஞர்களும் உதயநிதிக்கு ஆதரவாக உள்ளனர். உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு கடும் அபராதம் விதித்து, வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். நாடு முழுவதும் உதயநிதிமீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE