நீலகிரியில் சுற்றுலா பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு; 30+ காயம்

By டி.ஜி.ரகுபதி 


உதகை / கோவை: நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழித்தடத்தில் உள்ள பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 54 சுற்றுலா பயணிகள் பேருந்து மூலம் வியாழக்கிழமை உதகைக்கு சுற்றுலா வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்த பின்னர், சனிக்கிழமை (செப்.30) மாலை உதகையில் இருந்து அவர்கள் பேருந்து மூலம் கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பேருந்து குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் சனிக்கிழமை மாலை வந்து கொண்டிருந்தது. அங்குள்ள மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் பேருந்து வந்து திரும்ப முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச்சுவரில் மோதி நிற்காமல், அருகில் உள்ள 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்தில் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து தீயணைப்பு, காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, கோவை சரக டிஐஜி சரவணசுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் 10-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன. அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வந்த இந்த பேருந்தின் ஓட்டுநர், 9-வது கொண்டை ஊசி வளைவை சரியான முறையில் கடக்க திட்டமிடாமல், பேருந்தை திருப்பியதால் அது கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

சனிக்கிழமை இரவு 9.15 மணி நிலவரப்படி 8 பேர் உயிரிழந்ததும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் நிதின் (15), பேபி கலா (36), முருகேசன்(65), முப்பிடாத்தி (67), கவுசல்யா (29) மற்றும் பெயர் தெரியாத 3 பேர் எனத் தெரிந்தது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மீட்புப் பணிகள் தீவிரம்: விபத்து தொடர்பாக கோவை சரக டிஜஜி சரவணசுந்தர் கூறும்போது, “குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சுகிறோம். சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.

முதல்வர் நிதியுதவி அறிவிப்பு: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தென்காசி மாவட்டத்திலிருந்து உதகமண்டலத்துக்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவுக்கு சென்றவர்கள் இன்று (30-9-2023) தென்காசிக்கு திரும்பும் வழியில், சுற்றுலாப் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர், பர்லியாறு அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த முப்புடாதி (வயது 67), முருகேசன் (வயது 65), இளங்கோ (வயது 64), தேவிகலா (வயது 42), கௌசல்யா (வயது 29) மற்றும் செல்வன். நிதின் (வயது 15) ஆகியோர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனை விபத்து நடந்த இடத்தில் நடைபெற்றுவரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், மேலும் இவ்விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்