விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.40 லட்சத்தில் இருதய எக்கோ பரிசோதனைக் கருவி

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் ரூ.40 லட்சத்தில் நவீன இருதய எக்கோ பரிசோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலைய சமுதாய பொறுப்பு நிதியின் கீழ் ரூ.40 லட்சத்தில் நவீன இருதய எக்கோ பரிசோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் கலந்துகொண்டு நவீன எக்கோ பரிசோதனை அறையை ரிப்பன் வெட்டித் திறந்துவைத்தார். மேலும், கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் வழங்கப்பட்டுள்ள நவீன இருதய எக்கோ பரிசோதனைக் கருவியின் செயல்பாட்டையும் தொங்கிவைத்தார்.

இதுகுறித்து டீன் சங்குமணி கூறுகையில், “தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக இந்த நவீன இருதய எக்கோ பரிசோதனைக் கருவி வாங்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அனுமின் நிலையம் சார்பில் ஏற்கெனவே பல லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது வாங்கப்பட்டுள்ள இக்கருவி மூலம் மிக மெல்லிய நரம்புகளில் உள்ள சிறு அடைப்புகளையும் மிகத் துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். விருதுநகர் மாவட்டத்தில் முதன் முறையாக இந்த எக்கோ பரிசோதனைக் கருவி பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் டீன் சங்குமணி, இருக்கை மருத்துவ அலுவலர் முருகேசன், பச்சிளம் குழந்தைகள் பிரிவு மருத்துவர் ஜவகர், குழந்தைகள் சிறப்பு மருத்துவர் அரவிந்த்பாபு, கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட தலைமை முதன்மையர் பண்டாரம், உறுப்பினர் செயலர் பத்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE