“நம்பிக்கை துரோகத்தின் சின்னம்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்” - கே.பி.முனுசாமி கொந்தளிப்பு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: “நம்பிக்கை துரோகத்தின் சின்னம்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்” என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கொந்தளிப்புடன் தெரிவித்தார்.

இது குறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பாஜகவுடன் கூட்டணி குறித்த அதிமுகவின் நிலைப்பாடு குறித்து நாங்கள் ஏற்கெனவே தெளிவாக அறிவித்துவிட்டோம். எங்கள் கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றி விட்டோம். அதிமுக, பாஜக கூட்டணி இடையே ஏற்பட்ட முறிவுக்கு, அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்கிற விளக்கமும் கொடுத்துவிட்டோம்.

ஆனால், சமூக வலைதளங்கள், சில ஊடங்களில் திமுக அரசை கலைக்க பாஜகவை நாங்கள் நிர்பந்தம் கொடுத்தோம் எனவும், அதனால் தான் கூட்டணி முறிந்தது என தவறான தகவல்களை மக்களிடையே பரப்பி வருகின்றனர். இது கண்டிக்கதக்கது. அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகளில், தமிழகத்தில 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு கட்சி இதுபோன்ற கீழ்தரமான செயலை என்றைக்கும் செய்யாது. இதுபோன்ற தவறான கருத்துகளை சமூகவலைதளங்களில் பரப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக பொது செயலாளர் பழனிசாமியை, நம்பகத்தன்மையற்றவர் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். உண்மையிலேயே நம்பிக்கை துரோகத்தின் சின்னம் அவர்தான். பண்ருட்டி ராமச்சந்திரன் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ் என அவர் சென்ற இடங்களில் யாருக்கும் விசுவாசமாக இல்லை. நம்பிக்கை துரோகியுடன் அமர்ந்து கொண்டு, அவரை நம்பிக்கைக்கு உரியவர் என கூறுகிறார். தங்களுடைய சுயலாபத்துக்காக கொள்கையை விற்று, ஆதாயம் தேடும் 2 தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். நம்பகத்தன்மையற்றவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

பாஜக தலைவர் அண்ணாமலையை, 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக்க வேண்டுமென பாஜக கோரிக்கை வைத்தாக, முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் பேசி உள்ளார். பாஜக கூட்டணி முறிவுக்கான காரணம் என்ன என்பதை தெளிவாக தீர்மானம் போட்டு அறிவித்துவிட்டோம். இருப்பினும், சமூக வலைதளங்களில் தவறான கருத்துகள் திரும்ப, திரும்ப வரும்போது, அந்தக் கருத்துகளை மனதில் பதிந்து மேடையில் உண்மைநிலை மறந்து இவ்வாறு கருத்துகளை சொல்வது இயல்பு. கருப்பண்ணன் அவ்வாறு தான் பேசி இருக்கிறார்.

2026ம் ஆண்டு பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் இலக்கு. இதில் பாஜக எங்கே வருகிறது. வருகிற மக்களவைத் தேர்தலில், மக்கள் எந்த அளவில் பாஜகவை ஏற்றுக்கொள்கிறார்கள் என அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். அதிமுக குறித்து பாஜக எச்.ராஜா கண்மூடித்தனமாகவும், கீழ்தரமாகவும் பேசுகிறார்.

எங்களை நெல்லிக்காய் மூட்டை எனவும், தற்போது பாரம் குறைந்துள்ளது எனவும் விமர்சித்துள்ளார். நாங்கள் விரல் காட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் தான் நீங்கள். 2024 தேர்தலில் அதிமுக மக்களிடத்தில் எவ்வளவு சொல்வாக்கு உள்ளது என்பது தெரியும். மத்திய பாஜக அரசுக்கு பல்வேறு சட்ட மசோதக்கள் இயற்றிட அதிமுக ஆதரவு அளித்துள்ளதை மறந்துவிடக்கூடாது என ஆட்சியாளர்களுக்கும், எச்.ராஜாவுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரியில் தண்ணீர் திறக்க மேலாண்மை குழு அறிவித்த பின்பும், நீதிமன்றத்தை நாடுவது கர்நாடகா அரசின் தவறான அணுகுமுறை. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு செயல்படத் தவறும்பட்சத்தில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். வருகிற 2024 மக்களவை தேர்தல், 2026 சட்டப்பேரவை தேர்தல் என இரண்டிலும் பழனிசாமி தலைமையில் உருவாகும் கூட்டணியே தேர்தலை சந்திக்கும்” என்று அவர் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE