"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொடர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்... கூட்டணி பிளவுக்கான காரணம் குறித்து பேசவேண்டாம் என்று கட்சித் தலைமை எங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது... சூடான விமர்சனங்களை தவிர்க்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தி இருப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது... பிரச்சினையை சரி செய்ய தேசிய தலைமை பேசிக்கொண்டிருக்கிறது..." என்கிறார் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன். இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்த நேர்காணல் இது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தில் கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறிவிடாது என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. உங்கள் பதில் என்ன?
“மக்கள் கூடாமல் வாக்கு வாங்கிய தலைவர்கள் யாரும் இருக்கிறார்களா? எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களுக்கு மக்கள் கூடவில்லை; மக்கள் கூடாமலேயே வாக்குகள் அதிகம் பெற்று அவர்கள் முதல்வராக ஆகிவிட்டார்கள் என்று கூற முடியுமா? மக்கள் கூடுவதும், அடுத்து அது வாக்கு வங்கியாக மாறுவதும் இயற்கையாக நடக்கும். இவர்கள் எல்லோரும் வாக்கு வங்கி அரசியலில் வாக்கை காண்பித்திருக்கிறார்கள். வைகோவுக்கு கூட்டம் கூடியது; 12% வாக்குகளைப் பெற்றார். அவர் எடுத்த தவறான முடிவுகளால்தான் அவர் செல்வாக்கை இழந்தார். வைகோ, விஜயகாந்த், மூப்பனார், டிடிவி தினகரன் போன்றவர்களுக்கு கூட்டம் கூடியது. ஆனால், அவர்கள் எடுத்த அரசியல் முடிவுகளால்தான் அவர்கள் தோற்றுப்போனார்கள்.
பாஜக ஒரு தேசிய கட்சி. நாங்கள் தேசிய அளவில் வளர்ந்து கொண்டிருக்கிறோம். நான் தமிழ்நாட்டை தனியாகப் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவிலும்கூட வளராத பல மாநிலங்களில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தமிழ்நாடும் இணைந்திருக்கிறது. கட்சியின் மாநிலத் அண்ணாமலை அதற்கு தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்.”
» வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பின்படி பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் வேலையும் வழங்குக: திருமாவளவன்
» 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம்
அண்ணாமலையின் நடைபயணத்துக்கு வருபவர்கள் தானாக வருவதில்லை என்றும், வரவழைக்கப்படுகிறார்கள் என்றும் ஒரு விமர்சனம் உள்ளதே...
“இந்திய அரசியல் வரலாற்றில் கைப்பணத்தைப் போட்டு கட்சி நடத்துகிற அரசியல் தொண்டர்கள் இருக்கும் ஒரே கட்சி பாஜக மட்டும்தான். கூட்டம் கூடுவதற்கு கோழி பிரியாணி வழங்கப்பட மாட்டாது; குவாட்டர் (மது) கிடையாது; தலைக்கு ரூ.200, ரூ.300 என பேரம் பேசுவது கிடையாது. ஒரு மாவட்டத்தில் நடைபயணம் நடக்கும்போது அந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொண்டர்கள் வாகன ஏற்பாட்டோடு வருகிறார்கள். இதற்கு கட்சி பணம் கொடுப்பதில்லை. ஒரு குடும்பத்தில் 10, 15 பேர் வெளியே செல்வதாக இருந்தால் தனியாக வாகனம் வைத்துக் கொள்வதுபோலத்தான், தொண்டர்களும் வாகனம் வைத்துக்கொண்டு வருகிறார்கள். பணம் கொடுத்து கூட்டம் கூட்டும் வேலை பாஜகவில் கிடையாது.
முதலில் நோட்டாவுக்கு கீழே வாக்கு வாங்கக் கூடிய கட்சி பாஜக என சொன்னார்கள். தற்போது கூட்டம் கூடுவதைப் பார்க்கும்போது பணம் கொடுத்து கூட்டப்படும் கூட்டம் என சொல்கிறார்கள். முன்பு போல நோட்டாவோடு தொடர்புபடுத்தி தற்போது விமர்சிப்பதில்லை. தேர்தல் முடிந்து நாங்கள் வெற்றி பெற்றாலும் அப்போதும்கூட பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றார்கள் என சொல்வார்கள். பாஜகவின் வளர்ச்சியை இவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்பதாகத்தான் இத்தகைய விமர்சனங்களை நான் பார்க்கிறேன்.”
பாஜகவின் முந்தைய மாநில தலைவர்களுக்கும் தற்போதைய மாநில தலைவருக்கும் இடையே எத்தகைய வித்தியாசங்கள் இருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்கள்?
“ஒரு வித்தியாசமும் இல்லை. இல.கணேசன் மாநிலத் தலைவராக இருந்தபோது இந்த அளவுக்கு சமூக ஊடகங்கள் இல்லை. இத்தனை செய்தி சேனல்கள் இல்லை. கடந்த காலங்களில் இல.கணேசனோ, பொன் ராதாகிருஷ்ணனோ எங்காவது ஒரு இடத்தில் பேசினால் அது குறித்த செய்தி மறுநாள் பத்திரிகைகளில் வரும். அந்தப் பத்திரிகை செய்திகளை நாங்கள் தேடித்தேடி படிப்போம். ஆனால், இன்று நிலைமை அப்படி அல்ல. ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. உடனே, வீடியோ வருகிறது. ஒரு தலைவரின் பேச்சும், அவரது பேச்சுக்கான மற்றொரு தலைவரின் பதிலும் உடனே வந்துவிடுகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இண்டர்நெட் பயன்பாடு அதிகம். ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகம். எனவே, தலைவர்களின் பேச்சு அனைத்துத் தரப்பினரையும் சென்று சேர்வது உடனடியாக நடக்கிறது. இதில், ஒரு தலைவர் புகழ்பெறுவதும், புகழை இழப்பதும் மிக சுலபமாக இருக்கும்.
அண்ணாமலை காலம் என்பது தொழில்நுட்ப காலம்; இளைஞர்கள் அதிகமாக அரசியலுக்கு வரக்கூடிய காலம். நேர்மையான துடிப்புள்ள இளம் தலைவர் அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். படித்த ஒரு தலைவர். கொஞ்சம்கூட சமரசம் இல்லாமல் திமுகவை எதிர்க்கிறார். எனவே, இந்தக் காலகட்டம் அப்படி அமைந்திருக்கிறது. இதற்கு முன்னால் இருந்த தலைவர்களெல்லாம் ஒன்றும் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். எல்லா காலத்திலும் சிறப்பாக வேலை செய்த தலைவர்கள்தான் பாஜகவின் தலைவர்கள்.”
அண்ணாலை தன்னை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார் என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
“இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? முகம் தெரியாத தலைவரை ஒரு அரசியல் கட்சி உருவாக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்-ல் அப்படி உருவாக்கலாம். ஏனெனில், முழுக்க முழுக்க தியாகமும் அர்ப்பணிப்பும் உள்ள அமைப்பு அது. அந்த அமைப்பின் தலைவர் யார், மாவட்ட செயலாளர் யார் என்பது பொதுமக்களுக்குத் தெரியாது. ஆனால், எல்லோருக்குமே ஆர்.எஸ்.எஸ்-ஐ தெரியும். ஆனால், அரசியல் கட்சியை அப்படி நடத்த முடியாது. முகம் தெரிந்த தலைவர்களை வைத்துத்தான் அரசியல் செய்ய முடியும். அந்த தலைவர் செல்வாக்கு பெறும்போது அது கட்சியின் வளர்ச்சிக்கு உதவும். தொழில்நுட்ப காரணங்கள், தற்போது உள்ள அரசியல் சூழல் போன்றவை எங்களுக்கு வாய்ப்பாக இருக்கிறது.”
தமிழக பாஜகவை அண்ணாமலைக்கு முன் - அண்ணாமலைக்குப் பின் என பிரித்துப் பார்க்க வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
“ஏன் அப்படி பிரித்துப் பார்க்க வேண்டும். அண்ணாமலைக்கு முன் எல்.முருகன் தலைவராக இருந்தபோது பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்தார்களே. அண்ணாமலைக்கு முன் கட்சியில் 3 எம்பிக்கள் இருந்தார்களே. மதுரையில் 3 லட்சம் பேரை திரட்டி தாமரை சங்கமம் எனும் நிகழ்ச்சியை கட்சியின் தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் நடத்தினாரே. இல.கணேசன் தலைவராக இருந்தபோது கரசேவைக்கு சென்று கைதானதைப் போல அதற்குப் பின் அவ்வளவு பேர் கைதானது இல்லையே.
அதேநேரத்தில், புதிய இளைஞர்கள் அண்ணாமலைக் காலத்தில் வந்ததுபோல் இதற்கு முன் வரவில்லை. இளம் பெண்கள், புதிய வாக்காளர்கள் தற்போது பாஜகவுக்கு அதிகம் வருகிறார்கள். அதேபோல், இதற்கு முன் இல்லாத அளவு பட்டியல் சமுதாயத் தலைவர்கள் தற்போது மிக அதிக அளவில் பாஜகவுக்கு வருகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதற்காக, அண்ணாமலைக்கு முன்-பின் என்றெல்லாம் பேசுவது எங்களுக்குள் ஊடு சால் ஓட்ட முயல்வதைப் போன்றது. இது ஒருத்தரை உயர்த்துகிறோம் என்ற பெயரில் இன்னொருத்தரை மட்டம் தட்டுவது போன்ற ஒரு முயற்சி. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்.”
அதிமுக - பாஜக கூட்டணி இருக்கிறதா, இல்லையா?
“பாஜகவின் மத்திய தலைமை அறிவித்ததுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி. அதில் உள்ள கட்சிகள் குறித்து முடிவு செய்வது தமிழக பாஜக அல்ல; தேசிய பாஜக. அதில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்திருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்டதாக தேசிய பாஜக இன்னும் அறிவிக்கவில்லை. தேசிய பாஜகவின் முடிவுக்காக நாங்கள் பொறுமையுடன் காத்திருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொடர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.”
தேசிய பாஜகவின் நிலைப்பாட்டை அறிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க அதிமுக அமைதி காப்பதாகக் கூறப்படுகிறதே?
“நானும் அப்படி கேள்விப்பட்டேன். சூடான விமர்சனங்களை தவிர்க்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். அது எனக்கு மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. அதிமுக மீண்டும் வந்தால் மகிழ்ச்சி அடைவேன்.”
தேசிய பாஜக தனது முடிவை எந்த அடிப்படையில் எடுக்கும்?
“நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்குவோம்; அவரது தலைமையை ஏற்று அரசமைப்போம் என்பதுதான் ஒற்றை இலக்கு; ஒற்றை லட்சியம். இதை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்குவதில் அதிமுகவுக்கு எந்த தயக்கமும் இல்லை. அவர்கள் பலமுறை பிரதமரை; அவரது ஆட்சியை புகழ்ந்துதான் பேசி இருக்கிறார்கள்.
அந்தச் சூழலில், தமிழ்நாட்டில் மட்டும் நாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தனித்து நின்றால் அது வாக்கு பிளவுக்கு வழி வகுக்கும். திமுக வெற்றியை பெற்றுவிடும். நமக்கு பொது எதிரி திமுகதான். எனவே, மோடியை மீண்டும் பிரதமராக்குவோம் என்ற ஒற்றைப் புள்ளியில் நாம் இணைந்து செயல்படுவோம் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.”
தேசிய பாஜகவோடு தங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை என்றும், மாநில தலைவர் அண்ணாமலையோடு மட்டும்தான் தங்களுக்கு முரண்பாடு இருப்பதாகவும் அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறதே?
“இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. எங்கள் தலைமையேகூட, கூட்டணி பிளவுக்கான காரணம் குறித்து பேச வேண்டாம் என்றுதான் எங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. அதிமுக எப்படி மவுனம் காக்கிறதோ அப்படி நானும் மவுனம் காப்பதுதான் சிறந்தது.”
ஆனால், உங்கள் மாநில தலைவரை அவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்களே?
”இவை எல்லாமே தேசிய தலைமையின் கவனத்துக்குச் சென்று; அதை சரி செய்துகொண்டிருக்கும்போது; பேசிக்கொண்டிருக்கும்போது நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. இது குறித்து நாங்கள் பேசக்கூடாது என்று எங்களுக்கு அறிவுறுத்தலே இருக்கிறது.”
மகாத்மா காந்தி கொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி திமுக தரப்பில் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. உங்கள் பதில் என்ன?
“திமுகவின் ஐடி விங் தரப்பில் இப்படி ஓர் அபத்தத்தை செய்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் வழக்கை சந்திக்க நேரிடலாம். ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி, அர்ஜூன் சிங் ஆகியோர் இப்படி பேசி வழக்கில் சிக்கிக்கொண்டார்கள். ராகுல் காந்தி இந்தக் கருத்தைச் சொல்லிவிட்டு பின் திரும்பப் பெற்றுக்கொண்டார். ஏனெனில், நாட்டின் பல பகுதிகளில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே, இது சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வரும் ஒரு அவதூறு.
காந்தி கொலைக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் தொடர்பு இல்லை என்று அப்போதே தீர்ப்பு வந்துவிட்டது. நீதிமன்றத் தீர்ப்பின்படி நாதூராம் கோட்சே, நாராயண் ஆப்தே எனும் இருவர்தான் தூக்கிலிடப்பட்டார்கள். நாதூராம் கேட்சேவின் தம்பி கோபால் கோட்சே சிறை தண்டனை பெற்று பின்னர் விடுதலையானார். இந்த வழக்கில் வீர சாவர்க்கரை 4-வது குற்றவாளியாக சேர்த்தார்கள். ஆனால், அவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். நீதிமன்றத் தீர்ப்புக்கு 20 வருடம் கழித்து இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கபூர் கமிஷன் என ஒரு கமிஷன் போடப்பட்டது. அந்த கமிஷனும் காந்தி கொலைக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் தொடர்பு இல்லை என்றுதான் தீர்ப்பு கூறியது.
நான் ஒரு எதிர் கேள்வியை கேட்கிறேன். காந்தியை கொன்றது ஆர்எஸ்எஸ் இயக்கமாக இருந்தால், நேரு பிரதமராக இருந்த 1963-ல் குடியரசு தின அணிவகுப்பில் அவர் ஏன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை அதில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்? அந்த அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதன் சீருடையோடு, அதன் வாத்தியங்கள் முழங்க அதில் பங்கேற்றார்கள். எனவே, காந்தி கொலையோடு ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்புபடுத்துவது முழுக்க முழுக்க பொய். இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். ஆனால், மக்கள் இதை நிராகரித்துவிடுவார்கள்.”
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago