திருச்சி மாநகர வெள்ளத் தடுப்பு திட்டத்தில் அரியாறை சீரமைக்க அள்ளித்தான் தரல; கிள்ளியாவது தரக்கூடாதா?

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: திருச்சி மாநகரில் வெள்ளத்தடுப்புத் திட்டத்துக்காக அரியாறை ஒட்டியுள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தவும், கான்கிரீட் கரைகள் அமைக்கவும் ரூ.405 கோடி செலவாகும் என தமிழக அரசுக்கு திருச்சி நீர்வளத் துறையின் அரியாறு வடிநிலக் கோட்டம் அனுப்பிய கருத்துரு இன்னும் கிடப்பில் உள்ளது. எனவே, அரியாறு கரையில் உடைப்பு ஏற்பட்ட 7 இடங்களில் கான்கிரீட் தடுப்பு அமைக்க ரூ.4 கோடிக்கான கருத்துருவையாவது அரசு கவனத்தில் கொண்டு, விரைந்து நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருச்சி மாநகரின் தென்மேற்கு நுழைவாயிலான தீரன்நகர்- கருமண்டபம் பகுதியில் அரியாறு, கோரையாறு, உய்யக்கொண்டான் வாய்க்கால் ஆகியவை திருச்சி ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள குழுமாயி அம்மன் கோயில் அருகே சங்கமிக்கின்றன. உய்யக்கொண்டான் ஆறு மட்டுமே பாசன வாய்க்கால். இந்த வாய்க்கால் தொட்டிபாலம் வழியாக நகருக்குள் செல்கிறது. அரியாறு, கோரையாறு இரண்டும் தொட்டிப்பாலத்துக்கு அடியில் கடந்து குடமுருட்டி வழியாக காவிரியில் கலக்கின்றன.

மழைக்காலங்களில் அரியாறு, கோரையாறில் பெருக்கெடுக்கும் வெள்ளம் காரணமாக, மணிகண்டம் ஒன்றியத்தின் வடக்குப் பகுதிகளான தாயனூர், அதவத்தூர், அல்லித்துறை, புங்கனூர், சோமரசம்பேட்டை, நாச்சிக்குறிச்சி, குமாரவயலூர் ஆகிய ஊராட்சி பகுதிகள், அந்தநல்லூர் ஒன்றியத்தின் முள்ளிக்கரும்பூர், குழுமணி, மேக்குடி, மருதாண்டாக்குறிச்சி, மல்லியம்பத்து, திருச்சி மாநகருக்குட்பட்ட பிராட்டியூர், உய்யக்கொண்டான் திருமலை, சீனிவாசா நகர், குமரன் நகர், உறையூர் பகுதி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் இப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. திருச்சி மாநகர், புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்காத வகையில், அரசு திட்டங்களை அறிவித்தாலும், அதை முறையாக செயல் படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ரூ.405 கோடியில் திட்டம் திருச்சி பெருவெள்ளத் தடுப்புத் திட்டத்துக்காக, குறிப்பாக அரியாறு பகுதியில் உள்ள நிலங்களை கையகப்படுத்துவது, கான்கிரீட் சுவர், கரை அமைப்பது போன்றவற்றுக்காக மொத்தம் ரூ.405 கோடியில் திட்டம் தயாரித்து திருச்சி நீர் வளத் துறையின், அரியாறு வடிநிலக் கோட்டம் அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளது. ஆனால், அரசின் நிதித்துறையோ, ஒரு மாவட்டத்துக்கு இவ்வளவு தொகை ஒதுக்க முடியாது என கூறி அத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுள்ளதாக அதிகாரிகள் தெரி விக்கின்றனர்.

இதுகுறித்து அரியாறு வடிநிலக்கோட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அரியாறில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தி, கான்கிரீட் சுவர் அமைக்க ரூ.405 கோடிக்கு பெருவெள்ளத் தடுப்புத் திட்டம் தயாரித்து அரசுக்கு கருத்துரு அனுப்பினோம். நிதிப்பற்றாக்குறையால் மாற்று ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்தினர்.

இது தவிர, அல்லித்துறையிலிருந்து தீரன் நகர் வரை அரியாறு கரைகளில் கடந்த 2021-ல் வெள்ளத்தால் 7 இடங்களில் ஏற்பட்ட உடைப்பு பகுதியில் கான்கிரீட் தடுப்பு அமைக்க ரூ.4 கோடியில் திட்டம் தயாரித்து அனுப்பி உள்ளோம். அந்த தொகையாவது வந்தால் அரியாறு கரை உடைப்புப்பகுதிகள் சரிசெய்யப்படும். கோரையாறில் கடந்த ஆண்டு ரூ.1.20 கோடி மதிப்பில் தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டதால் அந்த ஆற்றின் மூலம் வெள்ளம் பாதிப்பு ஏற்படாது’’ என்றார்.

திருச்சி பிராட்டியூர் அருகே குபேரன் நகர் பகுதியில் 35 அடியாக
சுருங்கி காணப்படும் அரியாறு.

430 அடி அகலம் கொண்ட அரியாறு 35 அடியாக சுருங்கிய மர்மம்: தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ம.ப.சின்னத்துரை கூறும்போது, ‘‘அரியாறு, கோரையாறு, உய்யக்கொண்டான், குடமுருட்டி ஆறு, கொடிங்கால் ஆறு, பழைய கட்டளை மற்றும் புதிய கட்டளை வாய்க்கால்கள் ஆகியவற்றின் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால்களை 1929-ம் ஆண்டுக்கு முந்தைய வரைபடங்களை வைத்து அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாததே வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம். இந்த ஆறுகளில் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளன.

குறிப்பாக 430 அடி அகலம் கொண்ட அரியாறு, ஆக்கிரமிப்பு காரணமாக நாச்சிக்குறிச்சி, தீரன்நகர் பகுதிகளில் 35 அடியாக சுருங்கிவிட்டது. இதற்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE