செஞ்சி தொகுதியின் 10 கோரிக்கைகள் என்னவானது?

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: தமிழக முதல்வா் ஸ்டாலின் அறிவுறுத்தியபடி, மாநிலம் முழுவதும் தங்களது தொகுதிகளில் இதுவரை தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியா் மூலம் எம்எல்ஏக்கள் அனுப்பினா்.

அந்த வகையில், செஞ்சி தொகுதியில் தீா்க்கப்படாத கோரிக்கைகள் தொடர்பாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான அமைச்சா் மஸ்தான் அப்போதைய ஆட்சியர் மோகனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

செஞ்சிக் கோட்டையை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். மேலும் அங்கு ரோப் கார் வசதியை ஏற்படுத்த வேண்டும். சர்க்கரை குளம் மற்றும் செட்டிகுளத்தில் படகு சவாரி அமைக்க வேண்டும். ராஜா தேசிங்குவின் நினைவாக அவர் உயிர்நீத்த நீலாம் பூண்டியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். செஞ்சி - வல்லம் ஒன்றியங்களை இணைக்கும் சங்கராபரணி ஆற்றைக் கடந்து செல்லும் மேற்களவாய் ஆற்றங்கரையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

செஞ்சி அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக தரம் உயா்த்த வேண்டும். பெருவளூர் ஊராட்சியில் சமத்துவபுரம் அமைக்க வேண்டும். அனந்தபுரத்தில் போக்குவரத்து கழக பணிமனை, அனந்தபுரம், அவலூர் பேட்டையில் தீயணைப்பு நிலையங்கள், மேல்மலையனூரில் காவல் நிலையம் அமைக்க வேண்டும். செஞ்சியில் சுற்றுலா மாளிகை அமைக்க வேண்டும். செஞ்சியில் வேளாண் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அம்மனுவில் கூறியிருந்தார்.

இம்மனு மீதான நடவடிக்கை எந்த அளவில் உள்ளது என்று தொகுதி எம்எல்ஏவும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தானிடம் கேட்டபோது, “உடனே செய்ய வேண்டிய பணிகள் எதுவென்று கண்டறிந்து, அந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது 50 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் நிறைவேறும் தருவாயில் உள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE