கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு தர மறுப்பது நியாயம் இல்லை: அமைச்சர் துரைமுருகன் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: கர்நாடக அணைகளில் தமிழகத்துக்கு திறக்கும் அளவுக்கு தண்ணீர் இருந்தும் விடுவிக்காமல் இருப்பது நியாயம் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தினமும் 12,500 கனஅடி நீர்: காவிரி மேலாண்மை ஆணையம் அல்லது காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவாக இருந்தாலும் நாங்கள் கேட்பது தமிழகத்துக்கு 12,500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்பதுதான். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு தினசரி 5 ஆயிரம் கனஅடிதான் திறக்க அறிவுறுத்தியது.

அந்த நீர் பற்றாக்குறையாக இருப்பதால் பயிர்கள் காய்ந்து வருகின்றன. எனவே, மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 12,500 கனஅடி திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்போம். தற்போது காவிரியில் வரும் நீர், குறுவைக்கு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

கர்நாடகாவில் தண்ணீர் இல்லாத நிலையில் அவர்களிடம் நாம் தண்ணீர் கேட்கவில்லை. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் கே.ஆர்.எஸ் அணையில் 97.08 சதவீதமும், கபினியில் 95.74 சதவீதமும் தண்ணீர் இருந்தது. தற்போது 68.55 சதவீதம் உள்ளது.

ஹேரங்கி அணையில் கடந்தாண்டு 90 டிஎம்சி இருந்த நிலையில் தற்போது 79 டிஎம்சியும், ஹேமாவதியில் 99 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 49 சதவீதமும் தண்ணீர் உள்ளது.

நீரின்றி பயிர்கள் கருகுகின்றன: ஆனால், தமிழகத்தின் மேட்டூர் அணையில் கடந்தாண்டு 95.66 சதவீதம் தண்ணீர் இருந்த நிலையில், தற்போது 11.78 சதவீதம்தான் உள்ளது. கர்நாடக அணைகளில் தண்ணீர் தரும் அளவுக்கு போதிய அளவு உள்ளது. ஆனால் தண்ணீர் திறக்க மாட்டேன் என்று கூறுவது நியாயமே கிடையாது.

ஆற்றின் போக்கில் ‘டெயில் எண்ட்’ எனப்படும் கடைசிப் பகுதிக்குதான் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதையும் கர்நாடகா பின்பற்ற மறுக்கிறது. இங்குள்ள பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதாக தமிழக முதல்வர் தெரிவித்த நிலையிலும், அவர்கள் செவிசாய்க்கவில்லை. காவிரி முறைப்படுத்தும் குழுவின் உத்தரவையும் ஏற்காமல் மறியல் செய்கின்றனர்.

இரு மாநில மக்கள் நலன்: இங்குள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடகாவிலும், அங்குள்ள கன்னடர்கள் தமிழகத்திலும் வாழ்கின்றனர். எனவே, இரு மாநிலங்களும் நட்புடனும், பாசத்துடனும் இருந்தால்தான், அச்சமின்றி மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ முடியும். நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக முதல்வரின் வேண்டுகோளை மதிக்காமல் இருப்பது நியாயமில்லை.

எது எப்படி இருந்தாலும், உச்ச நீதிமன்றம், காவிரி முறைப்படுத்தும் குழு உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு தண்ணீர் விடுவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE