மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது சத்திய வார்த்தை. மழைக்கு மட்டுமில்லை. இடி, மின்னல், புயல் என சகலத்துக்கும் பொருந்தும். இவற்றுக்கு மட்டுமா? தேர்தல் தொடங்கி, பிரச்சாரம் நடந்து, வெற்றியும் அறிவிக்கப்பட்டுவிட்ட ஆர்.கே.நகர் அதகளம்... அரசியல் அரங்கில்... புதிய அத்தியாயங்களை எழுதும் போல் தெரிகிறது. இதோ... ரிசல்ட் வந்த மறுநாளே... அதிமுகவினர் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வனின் கட்சிப் பதவிகளைப் பறித்துவிட்டதாக அறிவித்துவிட்டனர்.
’என்னப்பா இது... இரட்டை இலை நமக்குக் கிடைச்சும் எதுவுமே நடக்கலையே... கனியலையே...’ என்கிறார்கள் அதிமுகவினர்.
‘கரெக்ட்டா... மக்கள் ஓட்டுப் போட ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலதான், 2ஜி வழக்குல குற்றவாளிகள் இல்லைன்னு தீர்ப்பு வந்துச்சு. ஆனாலும் டெபாசிட் கூட வாங்கமுடியலியே...’ என்று அலுத்துக் கொள்கிறார்கள் திமுகவினர்.
‘குஜராத்லயும் திரும்பவும் நம்ம ஆட்சிதான். எல்லாமே மோடி போட்ட பிரச்சார பிளான் தான். ஆனா, நோட்டாவை விட நமக்கு ஓட்டு கம்மிங்கறதை ஜீரணிக்கவே முடியலியே...’ என்று தவிக்கிறார்கள் பாஜகவினர்.
‘பாருய்யா... இரட்டை இலை இல்ல. போன முறை பிரபலப்படுத்திய தொப்பியும் தரல. வழக்கெல்லாம் இன்னும் நிலுவைலதான் இருக்கு. சமீபகாலங்கள்ல, எல்லாமே தோல்வி முகம்தான். ஆனாலும் சுயேச்சையா நின்னு, குக்கர் சின்னத்துல நின்னு, ஜெயிச்சிட்டாரே தினகரன்’ என சொல்லிச் சொல்லி ஆச்சரியப்படுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அரசியல் விமர்சகர்கள், கட்சியினர், ஊடகவியல் நண்பர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக ஆர்.கே.நகர் பொதுமக்கள் எனப் பலரிடம் பேசியதில்... தினகரன் ஜெயித்ததற்குப் பின்னே உள்ள காரணங்களை ஓரளவுக்கு அனுமானிக்க முடிந்தது.
‘என்ன... பணம்தானே...’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது. அந்தப் பக்கமும் ஆறாயிரம் வரை கொடுக்கப்பட்டிருப்பதை, தேர்தல் சமயத்தில் வலம் வந்தபோது பார்க்கமுடிந்தது. ஆக, பணம் என்பதைக் கடந்து சில விஷயங்களை ஆராய வேண்டியதாகவே படுகிறது, இந்தத் தேர்தலும் வெற்றியும்!
ஜெ.வியூகம்!
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுகவை இரும்பு, எஃகுக் கோட்டையாக உருவாக்கி, தி.மு.க.வையும் ஆனானப்பட்ட கருணாநிதியையும் எதிர்த்துக் களமாடி, வெற்றி பெற்ற வரலாறும் அதற்குப் பின்னேயுள்ள வியூகங்களும் வியக்கச் செய்பவை. இங்கே, இந்த ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் அத்தனை வியூகங்களும் கொண்டு தினகரன் சந்தித்தார். அவரின் அபிமானிகளும் ஆதரவாளர்களும் சந்தித்தனர்.
இங்கே இன்னொரு உண்மையும் வெளிப்படுகிறது. ஒருவேளை... ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் இல்லாதிருந்தால், இந்தியாவின் மூன்றாவது கட்சி எனும் பெயரெடுக்கும் அளவுக்கு அதிமுக வளர்ந்திருக்குமா என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதாவது இத்தனை அரசியல் மற்றும் தேர்தல் வியூகங்கள் அனைத்துமே சசிகலா மற்றும் சொந்தங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ எனும் சந்தேகம் ஆர்.கே.நகர் தேர்தலின் மூலம் இன்னும் உறுதிப்படுகிறது.
அட்டாக்... அட்டாக்... அட்டாக்!
ஒருவரைத் தொடர்ந்து அட்டாக் செய்து அடக்கிப் பார்க்கும் போது, ஒருகட்டத்தில் மக்களிடம் ஓர் அனுதாபமோ அல்லது ஈர்ப்போ அல்லது அபிமானமோ வந்துவிட வாய்ப்பு உண்டு என்பதே யதார்த்தம். முதல் முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த கட்டத்தில், அவர் மீதும் அவரின் செயல்கள் மீதும் கோபம். விளைவு... திமுகவை ஜெயிக்க வைத்தார்கள். ஆட்சிக்கு வந்த திமுகவும் நன்றாகவே செயல்பட்டாலும் அடுத்த தேர்தலில் ஜெ... ஜெயித்தார். காரணம்... மக்கள் மன்னித்தார்கள்.
ஒருபக்கம் வழக்குகள், இன்னொரு பக்கம் மத்திய அரசின் கிடுக்கிப்பிடிகள், இந்தப் பக்கம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு கட்சியில் இருந்து விலக்கிவைத்த நிலைமை, மீண்டும் தொப்பிச் சின்னம் கூடாது என்பதில் உறுதியாக இருந்த தேர்தல் ஆணையம், தொகுதியில் மாநிலப் போலீசே நடத்திய ராணுவக் கட்டுப்பாடுகள் என எல்லாமாகச் சேர்ந்து அவர் செய்த தவறுகளையும் செய்ததாகச் சொல்லும் தவறுகளையும் கடந்து மக்களுக்கு ஓர் அனுதாபம் ஏற்பட்டதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
பணம் தந்தாலும் ஓட்டு குக்கருக்குத்தான்!
அந்தப் பக்கமிருந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை யார் பார்த்தார்களோ இல்லையோ தொகுதி மக்கள் கூர்ந்து கவனித்தார்கள். ‘இன்னாபா இது. போலீஸே பாதுகாப்பு கொடுக்குது. யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்கோ’ எனும் மிரட்சி மக்களிடம் இருந்தது. இந்தப் பக்கம் வாங்கு. பாவம் தனியா அந்தப் புள்ளைய உட்டுட்டாங்களே...’ என்று குக்கருக்குக் குத்தினார்கள் வாக்குகளை! சொல்லப்போனால், தொப்பி(!)க்குப் போடலாம் என நினைத்த ஓட்டுகள் இவை. நாலாபக்கமும் இருந்து போடப்பட்ட தினகரனுக்கான முட்டுக்கட்டைகளே, அவருக்கான படிக்கட்டுகளாக மாறியிருக்கின்றன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
கட்சி சார்பற்ற ஓட்டு எப்படி?
முன்பெல்லாம் இரண்டு விஷயங்களைச் சொல்லுவார்கள். ஒன்று... இரட்டை இலையை யாராலயும் அசைக்கமுடியாது. அடுத்தது... திமுகவுக்கு விழவேண்டிய ஓட்டு, சிந்தாம சிதறாம திமுகவுக்குக் கிடைச்சே தீரும்! ஆனால் இந்த இரண்டுமே இந்தத் தேர்தலில் மாறியிருக்கின்றன. அவ்வளவு பலம் வாய்ந்தவரா தினகரன்?
அப்படியில்லை... காலமும் சூழலும் அப்படி பலம் பொருந்தியவராக ஆக்கியிருக்கிறது. சாலை வசதி தொடங்கி விவசாயம், கல்வி என பல பிரச்சினைகளில் இந்த ஆட்சியின் ‘கோமா’ நிலை, மக்களை கோபப்பட வைத்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. கிட்டத்தட்ட இந்தத் தேர்தலை, அந்த எதிர்ப்பை ஆட்சியாளர்களுக்குக் காட்டும் விதமாகவோ அல்லது ஆட்சியாளர்களுக்குக் கிடுக்கிப்பிடி போடுவதற்கு தினகரனை கொம்புசீவி விட்டால்தான் நடக்கும் என்று மக்கள் நினைத்தார்களோ..! அதனால் திமுகவுக்கு விழவேண்டிய ஓட்டுகள் கூட, குக்கருக்குள் விழுந்து நிரம்பின.
அதனால்தான் ஜெயலலிதா இங்கே காட்டிய ஓட்டு வித்தியாசத்தை விட, தினகரன் சுமார் அதைத் தாண்டி அதாவது நாற்பதாயிரத்துச் சொச்ச ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். வெல்லவைக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் ஊடகவியலாளர்கள்.
திமுக ஆட்டத்துக்கே இல்லை!
சொல்லப்போனால் இதுதான் இப்போது மக்களின் மனநிலை. அதுவும் ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டுமான நிலைப்பாடு! பல ஆண்டுகளாக அதிமுகவே தொடர்ந்து ஜெயித்து வரும் தொகுதி என்பது ஒருபக்கம். இரட்டை இலை, தொப்பி, குக்கர் என்றெல்லாம் நடந்த கூத்துகளும் குழப்பங்களும் இன்னொருபக்கம்.
இதற்கெல்லாம் முடிவு வேண்டுமெனில், ஒன்றுபட்ட அதிமுக வேண்டும். இதுவரை ஜெயலலிதாவுடனேயே இருந்த தினகரனுக்கா, அவர்களை வளர்த்தவர்களையே முட்டிப் பதம் பார்த்த ஓபிஎஸ், இபிஎஸ்க்கா? ஒவ்வொரு அமைச்சர்களும் அவர்களின் கம்பர், சேக்கிழார், தெர்மாக்கோல் என உளறல் பேச்சுகளும் நடவடிக்கைகளும் ஏதோவொரு கோபத்துக்கு மக்களைத் தள்ளியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
இதில், திமுக மீது தற்போது எந்தக் கோபமும் இல்லை. அதேநேரம் இப்போது திமுக ஜெயித்தால் கூட, ஜெயிக்க வைத்தால் கூட, சட்டசபையில் ஏதும் நிகழப்போவதில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆக, ஏதோ நிகழவேண்டும் எனும் பிரேக்கிங் நியூஸ் பரபரப்பில், படபடத்துக் கிடக்கிறார்கள் மக்களும்!
சுயேச்சையா தினகரன்?
dinakaran ttvjpgதினகரன் | கோப்புப் படம்: ஆர்.அஸ்வின்100
கட்சி இல்லை. அமைப்பு மாதிரியான எந்த அடையாளமும் இல்லை. தனியே சின்னம் இல்லை. அப்படியெனில் சுயேச்சைதான். ஆனால் மக்கள் அப்படி சுயேச்சையாகப் பார்க்கவே இல்லை என்கிறார்கள். தினகரனின் இத்தனை வருட அரசியல் பாப்புலாரிட்டியும் சசிகலாவின் உறவு என்கிற அடையாளமும் எம்.பி.யாக இருந்தவர் எனும் கவுரவமும் தாண்டி, ஜெயலலிதா மரணம், சசிகலா சிறைக்குப் பிறகு து.பொ.செ. பதவியும் இன்னொரு லேண்ட்மார்க்காகி விட, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகான இடைத்தேர்தலில் அவரே வேட்பாளராக, இன்னும் எகிறிவிட்டது பாப்புலாரிட்டி என்கிறார்கள் இந்தத் தொகுதி மக்கள்!
வெற்றி ஏற்படுத்திய கிலி!
வெற்றிவேல் வெளியிட்ட திடீர் வீடியோவைச் சொல்லவில்லை. அந்த வீடியோ, சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தாரின் மீதான சந்தேகங்களைத் துடைத்த மாதிரி தெரியவில்லை. வழக்கம் போல், டாக்டர் பீலே மாதிரியானவர்களின் விளக்கங்கள் எப்படி சந்தேகத்தை வலுப்படுத்தியதோ.. .இந்த வீடியோவும் அந்த ரகம்தான் என்பது மக்களின் கருத்து! அதேபோல், வீடியோவால் தினகரனுக்கு ஓட்டும் விழவில்லை. அதன் மீதான சந்தேகத்தால் மதுசூதனுக்கும் ஓட்டு போய்விடவில்லை.
அனைத்தையும் தாண்டிக் கிடைத்த தினகரன் வெற்றி... எடப்பாடி தரப்புக்குள் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூரில் இருந்து ஒரு எம்.பி. போய்ப் பார்த்ததும் இன்னும் எகிறத் தொடங்கிவிட்டது ‘லப்டப்’!
நிதானம், பொறுமை, சிரிப்பு!
மக்களிடம் கேட்டதற்கு, தினகரனின் ப்ளஸ் பாயிண்டுகளாக இதைத்தான் சொல்லுகிறார்கள். ‘அந்தப் புள்ள இவ்ளோ நிதானமா, பக்குவமாச் சொல்லுது’ என்கிறார்கள். ‘யாரையும் அடாவடியாப் பேசலை. கவுரவக் குறைச்சலா பேசலை. சிரிச்ச முகத்தோட, பொறுமையா, மரியாதையா பேசுறது பிடிச்சிருக்கு’ என்கிறார்கள்.
உடல்மொழி எனும் பாடி லாங்வேஜ், வசனம் எனப்படுகிற டயலாக் டெலிவரி என்பவை சினிமாவுக்கு மட்டுமின்றி அரசியலுக்கும் வாழ்க்கைக்குமே தேவை என்பதையே இது காட்டுகிறது. உணர்த்துகிறது.
வித்தியாச பேட்டிகள்!
எல்லோரிடமும் குறிப்பாக அரசியல்வாதிகளிடம் சில டெம்ப்ளேட் பதில்கள் இருக்கும். 2ஜி வழக்கில் தீர்ப்பு வந்தபோது, அதிமுகவினரும் பாஜகவினரும் அடுத்த கோர்ட் இருக்கு. அங்கே பாருங்கா... அங்கே பாப்போம் என்றார்கள். தினகரனிடம் இருந்து வந்த பதில்... பரவாயில்லை... இதை எதுவுமாகவே நான் பார்க்கவில்லை. அவர்களுக்கு என் வாழ்த்துகள்! இந்த பதிலைக் கேட்டு மக்கள் மட்டுமல்லாமல் திமுகவினரே ஆடித்தான் போனார்கள்.
இது கருணாநிதி ஸ்டைல்!
ஜெயலலிதாவின் வியூகம் என்றே வைத்துக் கொள்வோம். ஏனெனில் நமக்கெல்லாம் இரும்புமனுஷியாகத்தான் தெரியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆக தேர்தலும் தேர்தல் களமும் களமாடிய விதமும் மக்களை ஈர்த்த விஷயங்களும் வியூகங்கள். இது ஜெ... ஸ்டைல்!
ஆனால் அந்த ஸ்டைலுக்குள் தினகரன் இன்னொரு ஸ்டைலையும் புகுத்தியிருப்பதாகவே விமர்சகர்கள் பார்க்கிறார்கள். எந்தக் கேள்விக்கும் சளைக்காமல் பதில் சொல்வார் திமுக தலைவர் கருணாநிதி. கேள்விகள் எவ்வளவு வீரியமாக இருந்தாலும் அதை தன் காமெடியாலும் கிண்டலாலும் தவிடுபொடியாக்கிவிடுவார் கருணாநிதி.
ஆக, ஜெயலலிதா பாதி... கருணாநிதி பாதி. கலந்து செய்த கலவை நான் என்று இந்தத் தேர்தல் மூலம் மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் தினகரன்.
எது எப்படியோ... தினகரன் வெற்றி, மாநில அரசை மட்டுமல்ல... மத்திய அரசையே யோசிக்க வைத்திருக்கிறது.
யார்கண்டது... பிரேக்கிங்கே இல்லாமல், இனி பிரேக்கிங் நியூஸ் வந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் ஊடகவியல் நண்பர்கள்!
தலைமை இல்லாத வெற்றிடம் இங்கே... அதற்கு விடை தேடும் ஆரம்பம்தான் இந்தத் தேர்தலும் முடிவுமா?
அந்த வெற்றிடத்தை நிரப்புவது யார்?
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago