பெருமுகை சர்வீஸ் சாலையில் எப்போதும் ‘பேட்ச்-ஒர்க்’ - தெறிக்கும் கற்களால் பொதுமக்கள் குமுறல்

By வ.செந்தில்குமார்

வேலூர்: வேலூர் அடுத்த பெருமுகை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள சர்வீஸ் சாலை மோசமான நிலையில் ‘பேட்ச் ஒர்க்’ மட்டும் செய்து பராமரிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தின் வழியாக செல்லும் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதியாக பெருமுகை, கழனிப்பாக்கம், வெட்டுவானம் பகுதிகள் உள்ளன. இந்த இடங்களில் சாலையை கடந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை ஆமை வேகத்தில் உள்ளது.

இதில், பெருமுகை பகுதியில் மட்டும் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கிய நிலையில் கழனிப்பாக்கம், வெட்டுவானம் மேம்பாலம் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலை உள்ளது. பெருமுகை உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கியதில் இருந்து கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

காரணம், மோசமான சர்வீஸ் சாலை இருப்பதால் தான். பாலம் கட்டுமான பணி சுமார் 30 சதவீதம் அளவுக்குத்தான் முடிந்துள்ள நிலையில் பெருமுகை சர்வீஸ் சாலையை கடந்து செல்ல வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. இதில், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்வதால் பெருமுகை பகுதி மக்களும் பெரும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கியதில் இருந்து அங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் அவதிப் படுகின்றனர். மோசமான சர்வீஸ் சாலை வழியாக கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் சாரை, சாரையாக செல்வதால் உயிரை கையில் பிடித்தபடி சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது என புலம்பி வருகின்றனர்.

பெருமுகையின் இரண்டு பக்கமும் தினசரி கடந்து செல்ல சிரமமாக இருப்பதால் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். ஆனால், மோசமான நிலைக்கு மாறியுள்ள சர்வீஸ் சாலைக்கு எப்போதும் ‘பேட்ச்-ஒர்க்’ மட்டுமே பார்க்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர்.

இது குறித்து பெருமுகை கிராம மக்கள் கூறும்போது, ‘‘தேசிய நெடுஞ்சாலை இருக்கும்போது சர்வீஸ் சாலை தரமானதாக இருந்தது. பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் இருந்தது. ஆனால், மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியதில் இருந்து சர்வீஸ் சாலை வழியாக அனைத்து வாகனங்களையும் திருப்பி விட்டனர்.

அதன் பிறகு அதிக பாரம் தாங்காமல் சர்வீஸ் சாலை மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. வேறு வழியில்லாமல் வாகன ஓட்டிகள் குண்டும், குழியுமான சாலையில் செல்கின்றனர். சர்வீஸ் சாலையை தரமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவர்களின் கடமை என்பதையும் மறந்து விட்டனர்.

சர்வீஸ் சாலை சிறிது தொலைவாக இருந்தாலும் அதை முறையாக செப்பனிட்டு கொடுக்க வேண்டியது கட்டுமான பணியில் இருப்பவர்களின் கடமை. அதை அவர்கள் முறையாக செய்வதில்லை. இருக்கின்ற பள்ளங்களுக்கு அவ்வப்போது சிமென்ட், ஜல்லி கற்களை கொட்டி ‘பேட்ச்-ஒர்க்’ பார்க்கின்றனர். அது 4 நாட்களுக்குக்கூட தாங்குவதில்லை.

கடந்த ஒரு வாரமாக பள்ளங்களாக இருந்த சாலைக்கு இரவோடு, இரவாக சிமென்ட் கலவையை கொட்டிச் சென்றனர். தொடர்ந்து, மழை பெய்து வரும் நிலையில் ஒரு நாள் மழைக்கே அது தாங்காது. மீண்டும் பள்ளமாகிவிடும். வாகனங்கள் செல்லும் போது சாலையில் படர்ந்திருக்கும் ஜல்லி கற்கள் தெறிந்து நடந்து செல்லும் மக்கள் மீது பட்டு காயம் ஏற்படுகிறது.

சர்வீஸ் சாலையை ஒழுங்காக அமைக்காவிட்டால் பெருமுகை மக்கள் விரைவில் சாலை மறியலில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளோம். இனி அதிகாரிகள்தான் முடிவெடுக்க வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்