வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தரமணியில் வைக்கப்பட்டிருந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நாட்டின் பசுமை புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 98. சுற்றுச்சூழல், வேளாண்மை துறையில் அளப்பரிய பங்காற்றிய எம்.எஸ்.சுவாமிநாதனை கவுரவிக்கும் விதமாக, அவருக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் வைக்கப்பட்டிருந்தது. தலைமைச் செயலக பணிகளை முடித்துவிட்டு தரமணி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.எஸ்.சுவாமிநாதனின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தினார். தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோரும் முதல்வருடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள், சவுமியா சுவாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். நாளை நடைபெறவுள்ள இறுதிச்சடங்கில் தமிழக அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: நாட்டின் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98). கடந்த 1925 ஆக.7-ம் தேதி கும்பகோணத்தில் பிறந்த இவர், சென்னை தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி, அதன் தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்தார்.

மத்திய அரசின் விவசாயிகளுக்கான தேசிய ஆணையத் தலைவர், உணவு பாதுகாப்புக்கான சர்வதேச குழுவின் (CFS) உயர்நிலை நிபுணர் குழு தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் என பல முக்கிய பதவிகள், பொறுப்புகளை வகித்தவர். பத்ம விபூஷன், ராமன் மகசேசே விருது உட்பட பல உயரிய விருதுகளை பெற்றவர்.

இவர் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை ரத்னா நகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலை 11.20 மணி அளவில் காலமானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE