நெரிசலில் திணறும் சென்னை 100 அடி சாலை: விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்!

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: சென்னை 100 அடி சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளா கின்றனர். சென்னை வடபழனி, அசோக் நகர், கோயம்பேடு ஆகிய பகுதிகளை 100 அடி சாலை இணைக்கிறது. முக்கிய பகுதிகளை இணைக்கும் சாலை என்பதால் போக்குவரத்து நெரிசலுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. குறிப்பாக, பண்டிகை காலங்களில் பல லட்சம் பேர் சொந்த ஊர் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு பயணிப்பதால் சாலை நெடுகிலும் பேரணி போல வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். மழைகாலத்திலும் இதே நிலைதான் உள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே வடபழனி சந்திப்பிலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் முன்பும் மேம்பாலம் கட்டப்பட்டு ஓரளவு நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான பலன் கிடைத்து வந்த நிலையில்தான், 100 அடி சாலைக்கு இருபுறமும் மெட்ரோ ரயில் பணிகள் வேகமெடுத்தன. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, சாலையின் 2 பக்கத்திலும் சென்னை குடிநீர், கழிவுநீர் அகற்று வாரிய பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால், மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

100 அடி சாலையின் வாகன நெரிசலில் தினமும் சிக்கித் தவிக்கும் தனியார் நிறுவன ஊழியர் கணேசன் கூறியதாவது:மதுரவாயலில் இருந்து ரோகிணி திரையரங்கம் வழியாக வரும் வாகனங்கள், திருமங்கலம், எழும்பூரில் இருந்து வரும் வாகனங்கள் கோயம்பேடு செல்ல வேண்டு மானால் அங்குள்ள பாலத்தின் கீழ் உள்ள இணைப்பு சாலை வழியாகவே செல்ல வேண்டியிருக்கும். இதேபோல, கோயம் பேடு பேருந்து நிலையம், காளியம்மன் கோயிலில் இருந்து வரும் வாகனங்கள், பாலத்தின் கீழ் உள்ள இணைப்பு சாலை வழியாகவே மதுரவாயல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியும்.

இந்த நிலையில், கோயம்பேடு பாலத்தின் கீழ் இருபுறத்திலும் உள்ள இணைப்பு சாலைகளில் மழைநீர் கால்வாய் பணிகள் மற்றும் சேதம் காரணமாக சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. தவிர, அசோக் பில்லரில் இருந்து வந்து திருமங்கலம் செல்ல கோயம்பேடு பாலத்தில் ஏறினாலும், இறங்கும் பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் பாலத்தின் மீது நீண்ட வரிசையில் வாகனங்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. அன்றாடம் இதே நிலையே தொடர்கிறது. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் பலரும் நிலை தடுமாறி விழும் நிலை உள்ளது.

படங்கள்: ம.பிரபு

அதுவும் மழை காலங்களில் சாலை சேறும் சகதியுமாக இருப்பதால், விபத்து நிகழும் அபாயமும் உள்ளது. மேலும், கோயம்பேடு பகுதியில் மட்டுமின்றி, வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் இருந்தே போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் பகுதியில் சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோயம்பேடு பகுதியில் பணிகள் முடிந்துவிட்டன. சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில்கூட இந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என அமைச்சரும், துறைச் செயலரும் அறிவுறுத்தினர். இன்னும் ஒரு வாரத்தில் சாலைகள் முற்றிலுமாக சீரமைக்கப்படும். கோடம்பாக்கம், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் 100 அடி சாலை வந்து செல்ல வேண்டியுள்ளன.

வடபழனியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு இதுவே காரணம். போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து, மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்’’ என்றனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு பாலம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, நெரிசல் பெரும்பாலும் கட்டுக்குள் வந்துவிட்டது.

மேலும், பண்டிகை காலங்களில் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பேருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல வழிவகை செய்யப்படுகிறது. சொந்த வாகனங்களில் செல்பவர்களைக்கூட வெளிவட்ட சாலை வழியாக பயணிக்குமாறு அறிவுறுத்துகிறோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறையும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE