கர்நாடக பந்த் | மாநில எல்லையில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகவில் நடைபெற்று வரும் முழு அடைப்பால் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் ஜூஜூவாடியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில், தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரை செய்தது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசில் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த 26-ம் தேதி ஒரு சில அமைப்பினர் மட்டும் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை கர்நாடகா மாநிலம் முழுவதும் 1900 கன்னட அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுப்படுவதாக அறிவித்ததை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பணிகளுக்கு சென்ற பொதுமக்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் வியாழக்கிழமை மாலை ஓசூர் வழியாக தமிழகத்துக்கு திரும்பினர். அதேபோல் இரவு 8 மணி முதல் கர்நாடக மாநிலத்துக்கு பேருந்துகள் செல்லாமல் ஓசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை கர்நாடகவில் முழு அடைப்பையொட்டி ஓசூர் அடுத்த தமிழக எல்லையான ஜூஜூவாடியில் பாதுகாப்பு பணியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட போலீஸார் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை கர்நாடக மாநிலத்துக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஆனால், கர்நாடக மாநிலம் மற்றும் வேறு மாநில வாகனங்கள் செல்ல அனுமதி்க்கப்பட்டனர்.

மேலும், ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் ஜூஜூவாடி வரை பயணிகளை இறக்கிவிட்டு கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். கர்நாடக அரசு பேருந்துகள் 10 சதவீதம் மட்டும் இயக்கப்பட்டது.

கர்நாடக முழு அடைப்பால் ஓசூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளிலிருந்து தினமும் சுமார் 1000 டன் பூக்கள் விற்பனைக்கு செல்லாததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். அதேபோல் ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் உதிரி பாக பொருட்களும் வாகனங்களில் கொண்டு செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE