வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர மு.க.ஸ்டாலின் இன்று (செப்.29) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளையும், 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 5 கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளையும், நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 1000 கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 4 கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான ஆணைகளையும் வழங்கினார்.

தமிழக அரசால் 1955-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கமானது, இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தழிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973-ம் ஆண்டில் மறைந்த முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கலை பண்பாட்டுத் துறையின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழக அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலைவடிவங்களை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழக பராம்பரிய கிராமியக் கலைகளை வெளி மாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல், தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு அளிக்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், நலிந்த நிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி வழங்குதல்: 2021-22ஆம் ஆண்டுக்கான சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையில், கலைமாமணி விருது பெற்றவர்களில், வயோதிக நிலையில், பொருளாதாரத்தில் நலிந்து, இன்னலில் வாழ்கின்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக தற்போது வழங்கப்படும் பொற்கிழித் தொகை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சம் ஆக உயர்த்தி 10 கலைஞர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2022-23ம் ஆண்டுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களான கே.கல்யாணசுந்தரம், ச.சமுத்திரம், பார்வதி உதயம், கே. குமரவேல், பா. முத்துசந்திரன், கோ. முத்துலட்சுமி, பி.ஆர். துரை, ரா. கல்யாணசுந்தரம், எம்.எஸ். முகமது மஸ்தான், டி.என். வரலட்சுமி ஆகியோருக்கு பொற்கிழித் தொகையாக தலா 1 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை தமிழக முதல்வர் வழங்கினார்.

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 500 கலைஞர்களுக்கு இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட நிதியுதவி வழங்குதல்: தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில், நபர் ஒருவருக்கு ரூ.10,000- மதிப்பீட்டில், இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்க 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று 2021-22ஆம் ஆண்டுக்கான சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2022-23ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கிடும் அடையாளமாக, தமிழக முதல்வர 5 கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

நலிந்த நிலையில் வாழும் 1000 மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி வழங்குதல்: நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயல்படுத்தி வருகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 15,063 கலைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, 2020-21 மற்றும் 2021-22-ஆம் ஆண்டுகளுக்கான தெரிவு செய்யப்பட்ட 1000 நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு 1.04.2023 முதல் மாதந்தோறும் ரூ.3,000 வீதம் நிதயுதவி வழங்கிடும் வகையில், தமிழக முதல்வர் 4 நலிவுற்ற மூத்த கலைஞர்களுக்கு மாதந்திர நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க. மணிவாசன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் ஆகியோர் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்