கர்நாடகா பந்த் | தந்தையின் ஈமச்சடங்கில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து சென்றவர்களை அனுமதித்த போலீஸார் 

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு : கர்நாடகாவில் இறந்துபோன நபரின் ஈமச்சடங்கில் பங்கேற்க முடியாமல், காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் தவித்த உறவினர்களை கர்நாடகாவுக்குள் செல்ல அனுமதியளித்தனர். புளிஞ்சூர் சோதனைச் சாவடி வரை தாளவாடி போலீஸார் அவர்களுடன் சென்று வழி அனுப்பிவைத்தனர்.

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதைக் கண்டித்து கர்நாடக அமைப்புகள் சார்பில் இன்று பந்த் நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தில் முழு பந்த் நடைபெறுவதை அடுத்து மாநில எல்லைகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்துக்குள் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சிக்கோலா பகுதியைில் வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த பழனிச்சாமி இன்று இறந்துவிட்டார். அவருக்கு இறுதிச்சடங்கு செல்வதற்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்த அவரது மகன், மகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்ட உறவினர்கள் காரப்பள்ளம் சோதனை சாவடி வழியாக செல்ல வந்தனர். ஆனால் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி இல்லை எனக்கூறி போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இறந்த தந்தையின் ஈமச்சடங்கு செய்வதற்காக மகன் மகள் பேரக்குழந்தைகள் செல்ல முடியவில்லை என கண்ணீர் மல்க அங்கேயே காத்திருந்தனர். மேலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தங்களை இறுதிச்சடங்கு செய்ய அங்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள், இறுதிச்சடங்கில் பங்கேற்க கர்நாடகாவுக்குள் செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். புளிஞ்சூர் சோதனைச் சாவடி வரை தாளவாடி காவல்துறையினர் அவர்களுடன் சென்று வழி அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE