‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் தமிழகம் 2-வது இடம்: குடியரசுத் தலைவர் விருது வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: சீர்மிகு நகர திட்டங்களை (ஸ்மார்ட்சிட்டி) சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்துக்கான விருதுமற்றும் கோவை, தஞ்சாவூர்,தூத்துக்குடி மாநகராட்சிகளுக்கு சிறந்த மாநகரங்களுக்கான விருதை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் இந்திய சீர்மிகு நகர விருது போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2022-ம் ஆண்டுக்கான விருது போட்டியில், தேசியஅளவில் 2-வது சிறந்த மாநிலமாகதமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சீர்மிகு நகரங்களுக்கு இடையிலான போட்டியில், கோவை மாநகராட்சிக்கு தென்மண்டல அளவிலான நிதிமற்றும் செயல்திறனில் முதலிடம்,மாதிரி சாலைகள், ஏரிகள் புனரமைப்புக்காக தேசிய அளவில் முதலிடத்துக்கான விருது அறிவிக்கப் பட்டது.

அதேபோல் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மறுசீரமைப்பு மற்றும் நகரத்தின் அடையாளத்தை மேம்படுத்தும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு தேசிய அளவில் 3-ம் இடத்துக்கான விருதும், கல்வியை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு தேசிய அளவில் 3-வது இடத்துக்கான விருதும் கிடைத்துள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று முன்தினம் நடந்த, இந்திய சீர்மிகு நகர திட்ட விருது வழங்கும் விழாவில், 2-வது சிறந்தமாநிலமாகத் தேர்வு செய்யப்பட்ட தமிழகத்துக்கான விருதைகுடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். சிறந்த சீர்மிகு நகரங்களுக்கான விருதுகளை மாநகராட்சி மேயர்கள், அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE