திருப்பத்தூர்: திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, நகராட்சி பகுதியில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்த உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் நகராட்சி சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவரது மனைவி சுமித்தரா (38). இவர்களுக்கு பிரித்திகா (15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி (5) என 4 மகள்களும், 8 மாதத்தில் புருஷோத்தமன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் உயிரிழந்தார். 5 குழந்தைகளுடன் சுமித்தரா தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 22-ம் தேதி 4-வது மகள் அபிநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை தொடர்ந்து யோகலட்சுமி, புருஷோத்தமன் ஆகியோரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, 3 குழந்தைகளுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அபிநிதி மட்டும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு காய்ச்சல் குறையாததால் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், சிறுமி அபிநிதிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அபிநிதி உயிரிழந்தார்.
இதற்கிடையே, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த புருஷோத்தமன் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், யோகலட்சுமி தருமபுரி அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் அபிநிதி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து சிவராஜ்பேட்டையில் நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணிகளை நேற்று மேற்கொண்டனர். மேலும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சிவராஜ்பேட்டையில் நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு திரண்டு வந்த பொதுமக்கள், ‘‘நகராட்சி ஊழியர்கள் குப்பை கழிவுகளை வாங்கக்கூட இங்கு வருவதில்லை.
இந்த பகுதி முழுவதும் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஓடுகிறது. கால்வாய் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. எங்கு பார்த்தாலும் கழிவுநீர் குட்டைப்போல் தேங்கியிருக்கிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து இப்பகுதியைச் சேர்ந்த நிறைய பேருக்கு காய்ச்சல் ஆரம்பித்துள்ளது. தற்போது, டெங்குவால் ஒரு சிறுமி உயிரிழப்பு சம்பவமும் அரங்கேறி உள்ளது" என்றனர்.
அவர்களை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சமாதானம் செய்து சிவராஜ்பேட்டையில் அனைத்து பகுதிகளும் சீர்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். பிறகு, சிறுமி உயிரிழந்த வீட்டுக்கு சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டார். மேலும், சிவராஜ்பேட்டையில் பொது சுகாதாரத் துறை சார்பில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தவும் உத்தரவிட்டார். அதன்பேரில், மருத்துவர் ராம்பாலாஜி தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு மருத்துவ முகாம் நடத்தினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறும்போது, ‘‘ தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிவராஜ்பேட்டையில் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நகராட்சி நிர்வாகம் மெத்தன போக்குடன் செயல்படக்கூடாது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago