தென்மேற்கு பருவமழை குறைந்த நிலையில் 'வடகிழக்கு' கைகொடுக்குமா?

By செய்திப்பிரிவு

கோவை: இயற்கை நமக்களித்த மிகப்பெரிய கொடை மழை. சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில் 40 சதவீதம் கடலில் கலப்பதாகவும், 35 சதவீதம் வெயிலில் ஆவியாவதாகவும், 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்துக்கு உதவுவதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில் அதிகளவு மழை பெய்கிறது. தென்மேற்கு பருவமழைக்காலம் என்பது ஜூன் முதல் செப்டம்பர் வரை, வட கிழக்கு பருவமழைக்காலம் என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரையாகும்.

நடப்பாண்டு தென்மேற்கு பருவமழைக் காலம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டநிலையில், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்தச் சூழலில், வடகிழக்கு பருவமழைக் காலத்துக்கான மழை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்ககத்தில் பருவமழை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்ற கணினி கட்டமைப்பைக் கொண்டு நடப்பாண்டுக்கான வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

அதன்படி, அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, திருவாரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, காஞ்சீபுரம், தேனி, மதுரை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 31மாவட்டங்களில் இயல்பான மழையளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை இருக்கும்.

வடகிழக்கு பருவமழைக்காலத்தில் மாவட்டங்களில் எதிர்பார்க்கப்படும் மழையளவு (மி.மீட்டரில்): அரியலூர் 492, செங்கல்பட்டு 620, சென்னை 652, கோவை 369, கடலூர் 601, தருமபுரி 322, திண்டுக்கல் 430, ஈரோடு 295, கள்ளக்குறிச்சி 415, காஞ்சிபுரம் 634, கன்னியாகுமரி 531, கரூர் 276, கிருஷ்ணகிரி 261, மதுரை 401, மயிலாடுதுறை 845, நாகப்பட்டினம் 907, நாமக்கல் 273, பெரம்பலூர் 443, புதுக்கோட்டை 424, ராமநாதபுரம் 448, ராணிப்பேட்டை 352, சேலம் 359, சிவகங்கை 434, தஞ்சாவூர் 440, தேனி 360, தென்காசி 470, திருவள்ளூர் 485,திருவாரூர் 586, தூத்துக்குடி 398, திருச்சி 354, திருநெல்வேலி 467, திருப்பத்தூர் 259, திருப்பூர் 287, திருவண்ணாமலை 463, நீலகிரி 456,வேலூர் 309, விழுப்புரம் 472, விருதுநகர் 324 மிமீ என்ற அளவுக்கு மழை எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பயிர் ஆலோசனை: வேளாண் பல்கலை. அதிகாரிகள் கூறும்போது,‘‘வடகிழக்கு பருவமழை காலத்துக்கான குறுகிய மற்றும் மத்திய கால வயதுடைய ரகங்களை மட்டும் தேர்வு செய்து பயிரிட வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட பாசன வசதியுள்ள இடங்களில் மட்டும் நீண்ட கால வயதுடைய ரகங்களை பயிரிடலாம்.

மழைநீரை நிலத்துக்குள்ளேயே சேமிக்கும் வகையில் குறுக்கும், நெடுக்குமாக 20 அடி இடைவெளியில் சிறு வரப்புகளை ஏற்படுத்த வேண்டும். மழைநீரை பண்ணைக் குட்டைகளில் சேமித்து தட்டுப்பாடான சமயங்களில் நீர்பாசனம் செய்து பயிரைக் காப்பாற்றலாம். மானாவாரி பயிர்களில் விதைப்பு செய்வதற்கு முன் விதைகளை கடினப்படுத்தி விதைப்பு செய்யவேண்டும்.

கரிசல் மண் நிலங்களில் ஆழச்சால் அகலப்பாத்தி முறைகளை பயன்படுத்தலாம். சால் நடவு முறையில் கீழிலிருந்து மூன்றில் இருமடங்கு உயரத்தில் விதைகளை விதைக்க வேண்டும். இடைநிலை மற்றும் கடைநிலை வறட்சியின் போது தெளிப்பதற்கு பிபிஎஃப்எம் நுண்ணுயிரியினை தயாராக வைத்திருக்க வேண்டும். பயிர் கழிவுகளை கொண்டு மண் மூடாக்கு அமைத்து ஈரப்பதத்தை பாதுகாக்கலாம்.

நெல்லில் நீர் மறைய நீர் கட்டு என்ற முறையை பின்பற்றுவதன் மூலம் நீரை சேமிக்கலாம். பயிர்களின் வறட்சி தாங்கி வளர்வதை ஊக்குவிக்க பயிரின் தீவிர வளர்ச்சி பருவத்தில் ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு கரைசலை தெளிக்கலாம். தமிழ்நாடு வேளாண்மைப் பலகலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட பயிர் ஊக்கிகளை பயன்படுத்துவதன் மூலம் பயிரின் வறட்சி தாங்கும் தன்மையை அதிகரிப்பதோடு, பயிர் உற்பத்தியை பெருக்கலாம்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE