காவல் நிலைய வாயிலில் தீக்குளித்து இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: காலாப்பட்டு காவல் நிலைய வாயிலில் தீக்குளித்து இறந்த பெண்ணின் சடலத்தை உறவினர்கள் வாங்க மறுத்த சூழலில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதைத் தொடர்ந்து இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஆட்சியர் விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்த மீனவர் சந்திரன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை - மாரியம்மாள் தம்பதிக்கு ரூ.5 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இந்த கடனை திருப்பித் தராமல் ஏழுமலை காலம் கடத்தினார். இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, காவல் நிலையத்தில் ஏழுமலை புகார் தந்தார். அதன் அடிப்படையில் சந்திரனை போலீஸார் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு நேற்று அழைத்தனர். இதையடுத்து சந்திரனும், கலைச்செல்வியும் காலாப்பட்டு காவல் நிலையம் வந்தனர்.

காவல் நிலையத்தினுள்ள ஏழுமலை இருப்பதைப் பார்த்த கலைச்செல்வி கோபமடைந்து, தாங்கள் வந்த டூவீலரில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை திறந்து உடலில் ஊற்றித் தீக்குளித்தார். அங்கிருந்த போலீஸார் அவரை மீட்டு காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக் கொண்டு சென்று மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் கொண்டுசென்றனர். இதையடுத்து போலீஸாரை கண்டித்து காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் மீனவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் சமாதானப் படுத்தி கலைந்து போகச்செய்தும், அடுத்தடுத்து 3 முறை மறியல் செய்ததால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து காலாப்பட்டு எஸ்.ஐ இளங்கோ, துணை உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் ஆயுதப் படை பிரிவுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யபட்டனர். பெரியகடை உதவி ஆய்வாளர் குமார், காலாப்பட்டு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை டிஜிபி ஸ்ரீனிவாஸ் பிறப்பித்தார்.

இந்த நிலையில், ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த கலைச் செல்வி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இத்தகவல் கலைச் செல்வியின் குடும்பத்தினர், உறவினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 10 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டு காவல் நிலையம் அருகே ஒன்று கூடி மறியல் போராட்டத்துக்கு தயாராகினர்.

தகவலறிந்த எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா, சூப்பிரண்டு பக்தவச்சலம் மற்றும் போலீஸார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தகவலறிந்த தொகுதி எம்எல்ஏ கல்யாண சுந்தரம், அவர்களிடம் கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவியுங்கள் என கூறினார். அதற்கு அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்தனர். காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, பிள்ளைச் சாவடி, கனகசெட்டிகுளம் ஆகிய 4 மீனவ கிராம பஞ்சாயத்தார் சட்டப் பேரவைக்கு வந்தனர். பஞ்சாயத்தில் முக்கிய பிரதிநிதிகள் முதல்வரை இன்று மதியம் சந்தித்தனர்.

அப்போது தீக்குளிப்பை போலீஸார் தடுக்காததோடு அந்தப் பெண்ணுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதால் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். போலீஸார் மீது வழக்கு பதிவு செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ 25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ, முதல்வரிடம் பேசி முடிவு தெரிவிப்பதாக தெரிவித்தார். சிறிது நேரத்தில் டிஜிபி - ஆட்சியருடன் பேசி முடிவு தெரிவிப்பதாக முதல்வர் குறிப்பிட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்த மீனவ பஞ்சாயத்தார், சட்டப்பேரவை படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களை பெரியக்கடை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர்.

இச்சூழலில் பேரவை வெளியே காத்திருந்த மீனவர்கள் பேரவைக்குள் வரமுயன்றனர். அவர்களை பெரியக்கடை இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீஸார் தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம், மீனவ பஞ்சாயத்தாரை சமாதானப்படுத்தி முதல்வரிடம் மீண்டும் அழைத்து சென்றார். அப்போது முதல்வர் ரங்கசாமி, "காலாப்பட்டு காவல் நிலையத்தில் தீக்குளித்து இறந்த கலைச்செல்வி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி தரப்படும். மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்படுகிறது" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE