காவிரி விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில், முறைப்படி தமிழகத்துக்கு உண்டான நீரை கர்நாடகம் வழங்க வலியுறுத்தி தமிழகத்திலும் சில இடங்களில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.

இதற்கிடையே, கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதுபோன்ற பழைய வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற வீடியோக்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரித்துள் ளார்.

இதுதொடர்பாக டிஜிபி சங்கர்ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காவிரி பிரச்சினை சம்பந்தமாக, கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதுபோன்ற பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களை சமூக வலைதளங்களில் சிலர் தற்போது பரப்பி வருகின்றனர்.

இத்தகையை வதந்திகள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி, அதன் விளைவாக சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இவ்வாறான வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு டிஜிபி எச்சரித்துள் ளார்.

2 பேர் மீது வழக்குப் பதிவு: இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூருவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தாக்கப்பட்ட படங்களை தற்போது நடைபெறுவதாக மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த சீமான் மற்றும் நெல்லையைச் சேர்ந்த செல்வின் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என டிஜிபி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE