முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு அவமரியாதை செய்தவர்கள் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு அவமரியாதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

கர்நாடகாவில் பாஜக ஆதரவு பெற்ற ஒரு குழு, காவிரி நீர் பிரச்சினையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் படத்தை வைத்து, அவமரியாதை செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவிரி ஒழுங்காற்று ஆணையமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பில் கூறிய அளவு தண்ணீரைத்தான் தமிழகம் கேட்கிறது. நீரின்றி பயிர்கள் கருகுகின்றன. தமிழக விவசாயிகள் சொல்லொணா துயரம் அடைகிறார்கள். ஆனாலும் தமிழகத்தைச் சேர்ந்த மக்களும், விவசாயிகளும், அரசும், முதல்வரும் உணர்ச்சியைத்தூண்டிவிடாமல் பொறுப்பான தன்மைகளோடு கோரிக்கையை வைத்து வருகிறோம்.

ஆனால் கர்நாடகத்தில், அம்மாநில பாஜக இதை அரசியலாக்கும் முயற்சியில், 2 மாநில மக்களுக்கிடையே வன்மத்தையும், வன்முறையையும் தூண்டிவிட முயல்கிறது. தமிழகத்தில் கூட விவசாயிகள் சங்கத்தினர் ரயில் மறியல் செய்தார்கள். அதில் வன்முறை நிகழாமல், எல்லை மீறிய ஒரு சிலரையும் காவல் துறை கைது செய்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இதேபோன்ற ஒரு நிலைமை கர்நாடகத்திலும் வர வேண்டும். அனைத்து கட்சிகளும் அரசியல்பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். கர்நாடக மாநில அரசு வன்முறையில் ஈடுபடுகிறவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது ஒரு இறையாண்மையுள்ள தேசம். இக்கட்டான காலங்களில் நாம் பொறுமை காப்பதும், மனிதநாகரிகத்தோடு நடந்து கொள்வதும் மிகமிக முக்கியம். அதைகர்நாடகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் பின்பற்ற வேண்டும். தமிழக முதல்வர் படத்துக்கு அவமரியாதை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE