கூடங்குளம் அணுஉலை அருகே கடலில் சிக்கிய நீராவி ஜெனரேட்டர்கள் 19 நாட்களுக்குப் பின் மீட்பு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுஉலைக்கு இழுவை கப்பலில் கொண்டுவரப்பட்டபோது பாறையில் மோதியதால் சிக்கிய அந்த கப்பலில் இருந்த 2 நீராவி உற்பத்தி ஜெனரேட்டர்களும் 19 நாட்களுக்குப்பின் நேற்று மாலையில் பத்திரமாக மீட்கப்பட்டது.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் 5 மற்றும் 6-வது அணுஉலைகளில் அமைப்பதற்காக 2 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷ்யாவிலிருந்து மும்பை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து கப்பல் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. தூத்துக்குடியில் இருந்து இழுவை கப்பலில் ஏற்றப்பட்டு கூடங்குளம் அணுஉலைக்கு கடல் மார்க்கமாக வழியாக இழுத்து வரப்பட்டது.

இந்த இழுவை கப்பல் கடந்த 8-ம் தேதி கூடங்குளம் அணுஉலை அருகே வந்தபோது இரும்பு கயிறு அறுந்துவிட்டதால் மிதவை கப்பல் அந்த பகுதி கடல் அடியில் உள்ள பாறையில் மோதி சிக்கியது. இதனால் மிதவை கப்பலை அங்கிருந்து இழுத்து வரமுடியவில்லை. மிதவைகப்பலையும் அதிலிருந்த தி ஜெனரேட்டர்களையும் மீட்கும் முயற்சியில் கூடங்குளம் அணுஉலை பொறியாளர்கள் மற்றும் கப்பல் ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

இலங்கையில் இருந்தும் அதிக திறன்கொண்ட இழுவை கப்பல் வரவவைக்கப்பட்டு மீட்கும் முயற்சி நடைபெற்றது. ஆனாலும் மிதவை கப்பலை மீட்க முடியவில்லை. இதனை அடுத்து அணுஉலை பொறியாளர்கள் மற்றும் துறைமுக பொறியாளர்கள் கூடங்குளம் கடற்கரையில் இருந்து மிதவை கப்பல் வரையில் கடலில் சாலை அமைக்க முடிவு செய்தனர்.

அதன்படி சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து முடிந்தது. இதையடுத்து பாறையில் சிக்கிய மிதவைகப்பலையும் அதிலிருக்கும் ஜெனரேட்டர்கள் ஒவ்வொன்றாக அதிகதிறன் கொண்ட கிரேன் மூலமாக ஹைட்ராலிக் டிரைலரில் ஏற்றப்பட்டு பத்திரமாக நேற்று மாலையில் கூடங்குளம் அணுஉலை பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. 19 நாட்களுக்குப்பின் நீராவி ஜெனரேட்டர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதை அடுத்து அணுஉலை பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE