புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளதா? - முதல்வர் ரங்கசாமி பதில்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக உள்ளதா என்ற கேள்விக்கு, அக்கூட்டணியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியுள்ளது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உள்ளது. ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கட்சிகள் இடம்பெற்றுள்ளன. எம்எல்ஏக்கள் இல்லாததால் அதிமுக ஆட்சியில் பங்கெடுக்கவில்லை. அதேநேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பிளவு புதுவையிலும் ஏற்பட்டுள்ளது. புதுவையை பொறுத்தவரை என்ஆர். காங்கிரஸ் ஆட்சியில் தொடர பாஜகவின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 6 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. அதோடு 3 சுயேச்சை எம்எல்ஏக்கள், 3 நியமன எம்எல்ஏக்கள் ஆதரவும் பாஜகவுக்கு உள்ளது.

இந்த நிலையில் சுற்றுலா தினவிழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமியிடம், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளதா என கேட்டதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, “இதை அதிமுகவிடம்தான் கேட்க வேண்டும். அதேநேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது. ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது" என்று கூறினார். மேலும், “கூட்டணி குறித்து புதுவை அதிமுகதான் விளக்கவேண்டும்” என்றார்.

காவிரி நீர் பிரச்சினை குறித்து கேட்டபோது, “புதுவைக்கு உரிய காவிரி நீரை பெற நடவடிக்கை எடுப்போம். நேரில் சென்று வலியுறுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE