புதுவை அரசு ஹெலிகாப்டர் வாங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை விருப்பம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஹெலிகாப்டர் வாங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை விருப்பம் தெரிவித்துள்ளார்.

புதுவையில் சுற்றுலா தின விழாவை தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று பேசியது: “மருத்துவச் சுற்றுலாவில் புதுவை இந்த பாரதத்திலேயே முதன்மையாக இருக்க வேண்டும். புதுவையில் பொருளாதார சுற்றுலாவை உருவாக்க வேண்டும். பொருளாதார சுற்றலா நகரமாக புதுவை மாற வேண்டும் என்பது எனது விருப்பம். சீனா, சிங்கப்பூர் போனால் பொருட்களை குறைவான விலையில் வாங்கி வந்து இங்கே விற்பனை செய்கிறார்கள். அதேபோல் புதுவையில் சுற்றுலா துறை சிறப்பாக இருந்தாலும் பல புதுமைகளை கொண்டு வர வேண்டும். ஒரே நாளில் புதுவையை சுற்றி வருவதற்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்க வேண்டும்.

புதுவை அரசுக்கு என ஹெலிகாப்டர் வாங்க வேண்டும். இதுகுறித்து ஏற்கெனவே முதல்ரவரிடம் கூறியுள்ளேன். அப்படி ஹெலிகாப்டர் வாங்கினால் புதுவை அரசும் பயன்படுத்தலாம், சுற்றுலாவுக்கும் பயன்படுத்தலாம். ஹெலிகாப்டர் சுற்றுலா இப்போது அதிகமாக வளர்ந்து வருகிறது. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாதம் ஒரு சுற்றுலா நிகழ்வை நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அப்போதுதான் அதிகளவில் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவார்கள்.

புதுவையில் அதிகமாக வருவாயை சுற்றுலாத் துறைதான் ஏற்படுத்தி தருகிறது. புதுமையான பல எண்ணங்களை ஏற்படுத்தி சின்னச் சின்ன சுற்றுலா மேம்பாடுகளை கொண்டு வரவேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து வரும் அளவுக்கு இல்லாவிட்டாலும், நமது மாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்து பார்க்கும் வகையில் சிறிய சுற்றுலா திட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE