“என்டிஏ கூட்டணி குறித்து பாஜக அறிவித்தால் எங்கள் கருத்தை தெரிவிப்போம்” - ஓபிஎஸ்

By என்.சன்னாசி

மதுரை: தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து பாஜக அதிகாரபூர்வமாக அறிவித்தால் எங்களின் கருத்தை தெரிவிப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் புதன்கிழமை மதியம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரைக்கு வந்தார். செய்தியாளர்கள் அவரை சந்திக்க முயன்றனர். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) தொடர்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளிக்காமல் சென்றார். பின்னர், அவருடன் வந்த முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் ‘என்ன கேள்வி கேட்டீர்கள்’ என விளக்கம் கேட்டார். என்டிஏ கூட்டணி இருக்கிறீர்களா என கேட்டதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவரின் செல்போனில் தொடர்புகொண்ட ஓபிஎஸ், என்டிஏ கூட்டணி என்பதற்கு பதிலாக எனது காதில் இண்டியா கூட்டணி என விழுந்ததால் பதிலளிக்காமல் சென்றுவிட்டேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து பாஜக முறைப்படி அதிகாரபூர்வமாக அறிவித்தபின், எங்கள் நிலைபாடு குறித்த கருத்தை தெரிவிப்போம் என்றார்.

தொடர்ந்து, காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், இதை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காத செயலாக பார்க்கிறேன். பாஜக - அதிமுக கூட்டணி முறிவு பற்றி பேசவேண்டாம். நல்லவர்களை பேசுவோம். இருப்பினும், அதிமுக - பாஜக கூட்டணி விலகல் குறித்தோ அல்லது பாஜக கூட்டணியில் தொடர்வது குறித்தும் நாளை மாலை செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறேன் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE