பருவம் தவறியதால் பாடுபட்டும் பலனில்லை; வயல்களில் 30% நெல் வீணானது - குமரி விவசாயிகள் கவலை

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவம் தவறி பயிரிட்ட நெற்பயிர்கள் துரிதமாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மழையில் சிக்கி 30 சதவீதத்துக்கும் மேல் நெல் மற்றும் வைக்கோல் வயல்களில் வீணானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ அறுவடை பணி நிறைவடையும் தருவாயில், அடுத்த கும்பப்பூவுக்கு நாற்றங்கால் நடவு பணி தொடங்கியது. காலதாமதமாக பாசன கால்வாய்களை தூர்வாரியது, நீர்மேலாண்மையில் பொதுப்பணித்துறையினர் காட்டிய அலட்சியம் போன்றவற்றால் கடந்த மாதம் முடிய வேண்டிய நெல் அறுவடை பணியில் தொய்வு ஏற்பட்டது.ஆளூர், வீராணி, இரட்டைக்கரை கால்வாய், இரணியல் கால்வாய் பாசனப் பகுதியில் அறுவடை நேரத்தில் நாற்றங்கால் பணி நடைபெற்றது. ஆற்றுப்பாசனத்தை நம்பியிருந்த விவசாயிகள் போதிய தண்ணீர் கிடைக்காமல் திண்டாடினர்.

வயல்களில் வீணாகின: கடும் பேராட்டத்துக்கு மத்தியில் 2,000 ஏக்கருக்கு மேல் நல்ல விளைச்சலுடன் நெற்பயிர்கள் அறுவடை பருவத்தை எட்டியது. கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக சாரல் மழை பொழிந்த நிலையில் நடுவே இரு நாட்கள் வெயிலடித்தது. அதன் பின்னர் விட்டு விட்டு சாரல் பொழிந்தது. நெல் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

வேம்பனூர், இரணியல், பரசேரி உட்பட பல பகுதிகளில் கடந்த இரு நாட்களாக இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணி நடந்தது. மழையால் பெரும்பாலான நெற்கதிர்கள் சாய்ந்ததால் நெல் மணிகள் உதிர்ந்து விட்டன. எஞ்சிய நெற்கதிர்களை விவசாயிகள் அறுவடை செய்து சாலையோரம் கொண்டு சேர்த்தனர். ஆனால் மழையில் நனைந்ததால் ஈரப்பதம் ஏற்பட்டு 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட நெல்மணிகள் வயல்களில் வீணாகி விட்டன. வைக்கோலும் கால்நடைகளுக்கு பயன்படுத்தமுடியாமல் வீணாகி விட்டன.

அதிக ஈரப்பதத்துடன் அறுவடை செய்த நெல்லை சாலையோரம் குவித்து
வைத்து மூட்டை கட்டும் விவசாயிகள். படங்கள்: எல்.மோகன்.

அறுவடை செய்த நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்காக சாலையோரம் வைத்து அளந்து மூட்டை கட்டிய போதும் மழை பொழிந்ததால் நெல் மூட்டைகள் நனைந்தன. ஈரப்பதத்தை காரணம் காட்டி குறைந்த விலைக்குவிற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் குவிண்டாலுக்கு ரூ.150 வரை விலை குறைவாக தனியார் நெல் அரவை ஆலைகளுக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.இதுகுறித்து வேம்பனூர் பகுதி நெல் விவசாயிகள் கூறியதாவது:

இதுவரை இல்லாத வகையில் பருவம் தவறி நெல் அறுவடை நடைபெறுகிறது. இனி வரும் காலங்களில் நீர்மேலாண்மையில் பொதுப்பணித்துறையினர் அலட்சியம் காட்டக்கூடாது. தற்போது கும்பப்பூ சாகுபடி செய்து உரம் போட வேண்டிய தருணத்தில் அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

பாதியாக குறையும்: மாவட்டம் முழுவதும் இன்னும் 1,000 ஏக்கர் வரை நெல் அறுவடை நடைபெற வேண்டியது உள்ளது. வைக்கோலுக்கு நல்ல விலை உள்ள நேரத்தில் பாதிக்கு மேல் வயலில் வீணானதால், அவற்றை உரமாக்குவதை தவிர வேறு வழியில்லை. விவசாயத்தை பெரளவுக்கு மட்டும் அரசு ஊக்குவிக்கிறது. இதனால் நெல் விவசாயத்தை விட்டு விடலாமா? என்ற எண்ணத்தில் உள்ளோம்.

இதே நிலை நீடித்தால் வரும் காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் விவசாயம் பாதியாக குறைந்து விடும். எனவே, நெல் விவசாயத்தை காக்க குமரி மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 secs ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

மேலும்